இலங்கையில் : விரைவில் சட்ட திருத்தம் மேற்கொள்ள முடிவு

இலங்கையில் : விரைவில் சட்ட திருத்தம் மேற்கொள்ள முடிவு


கொழும்பு, ஜூலை 11: இலங்கையில் பிரதமருக்கு அதிக அதிகாரம் வழங்கும் வகையில் அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளது.இதுதொடர்பாக அதிபர் ராஜபட்ச, எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க இடையே சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய இரு தினங்கள் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் ஒருமித்த கருத்து எட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது. எனினும் அதிபருக்கு உள்ள அதிகாரங்களிலிருந்து எவற்றையெல்லாம் பிரதமருக்கு அளிப்பது என்பதில் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு நீடிக்கிறது. இதுகுறித்து பேசித் தீர்க்க இருவரும் முடிவு செய்துள்ளனர்.இலங்கையில் தற்போது பிரதமரைவிட அதிபருக்குதான் கூடுதல் அதிகாரம் உள்ளது. அதிபர் பதவியில் இருப்பவர், இரண்டு முறைக்கு மேல் அப்பதவியில் நீடிக்க முடியாது. ஒருவரே எத்தனை முறை வேண்டுமானாலும் அதிபர் பதவியை வகிக்கும் வகையில் சட்டத் திருத்தம் மேற்கொள்ள ராஜபட்ச திட்டமிட்டிருந்தார். ஆனால் எதிர்க்கட்சிகள் இதற்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தன. ஆளும் கூட்டணியில் உள்ள சில கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்தன. ஐக்கிய தேசிய கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடந்த செவ்வாய்க்கிழமை நாடாளுமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தி தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.இதன் காரணமாக அதிபருக்கு உள்ள அதிகாரத்தை மாற்றி பிரதமருக்கு அளிக்கும் வகையில் சட்டத் திருத்தம் மேற்கொள்ள ராஜபட்ச முடிவு செய்தார். தற்போது அதிபருக்கு உள்ள அனைத்து அதிகாரங்களையும் பிரதமருக்கு அளிக்க ராஜபட்ச விருப்பம் தெரிவித்துள்ளார். அதேபோல் மாகாணங்கள் அனைத்தும் பிரதமரின் அதிகாரத்துக்குள்பட்டதாக இருக்க அவர் விரும்புகிறார். இதற்கு ரணில் எதிர்ப்பு தெரிவித்ததால், ராஜபட்ச அவருடன் பேச்சு நடத்தி உள்ளார். அதிபர் மாளிகையில் நடைபெற்ற இந்த சந்திப்பின்போது அரசியலமைப்புச் சீர்திருத்தம் மற்றும் அதன் ஷரத்துகளில் சட்டத் திருத்தம் மேற்கொள்வது தொடர்பாக இருவரும் விரிவாக விவாதித்ததாகக் கூறப்படுகிறது. இப்பேச்சுவார்த்தையில் ஒருமித்த கருத்து எட்டப்பட்டாலும், மீண்டும் திங்கள்கிழமை சந்தித்துப் பேச இருவரும் திட்டமிட்டுள்ளனர். கூட்டத்தில் பங்கேற்க மூத்த அமைச்சர்களுக்கும் ராஜபட்ச அழைப்பு விடுத்துள்ளார்.வரும் ஆகஸ்ட் மாதம் அரசியலமைப்புச் சட்டத் திருத்தத்தை சமர்ப்பிக்க ராஜபட்ச திட்டமிட்டுள்ளார். அதற்கு எதிர்க்கட்சிகளின் ஒத்துழைப்பு பெறவேண்டியுள்ளதால் கருத்தொற்றுமை காண அவர் திட்டமிட்டுள்ளார். இதற்கு ஒப்புதல் கிடைக்கும் பட்சத்தில் அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு, பிரதமர் பதவியைப் பிடிக்க ராஜபட்ச திட்டமிட்டிருப்பது உறுதியாகியுள்ளது.