வேள்வித் தீ





ராகம்-நாதநாமக்கிரியை                       தாளம்-சதுஸ்ரஏகம்

ரிஷிகள் :எங்கள் வேள்விக் கூடமீதில்
ஏறுதே தீ!தீ!-இந்நேரம்,
பங்க முற்றே பேய்க ளோடப்
பாயுதே தீ!தீ!-இந்நேரம்

அசுரர் : தோழரே!நம் ஆவி வேகச்
சூழுதே தீ! தீ!-ஐயோ!நாம்
வாழ வந்த காடு வேக
வந்ததே தீ!தீ!-அம்மாவோ!


ரிஷி: பொன்னை யொத்தோர் வண்ணமுற்றான்
போந்து விட்டானே!-இந்நேரம்,
சின்ன மாகிப் பொய் யரக்கர்
சிந்தி வீழ்வாரே!-இந்நேரம்

அசு: இந்திராதி தேவர் தம்மை
ஏசி வாழ்ந்தோமே!-ஐயோ!நாம்,
வெந்து போக மானிடர்க்கோர்
வேத முண்டாமோ!-அம்மாவோ!

ரிஷி : வானை நோக்கிக் கைகள் தூக்கி
வளருதே தீ!தீ!-இந்நேரம்,
ஞான மேனி உதய கன்னி
நண்ணி விட்டாளே!-இந்நேரம்.

அசு: கோடி நாளாய் இவ்வனத்திற்
கூடி வாழ்ந்தோமே-ஐயோ!நாம்
பாடி வேள்வி மாந்தர் செய்யப்
பண்பிழந் தோமே!-அம்மாவோ!

ரிஷி:காட்டில் மேயும் காளை போன்றான்
காணுவீர் தீ!தீ!-இந்நேரம்,
ஓட்டி யோட்டிப் பகையை யெல்லாம்
வாட்டுகின்றானே!-இந்நேரம்.

அசு:வலியி லாதார் மாந்த ரென்று
மகிழ்ந்து வாழ்ந்தோமே-ஐயோ!நாம்
கலியை வென்றோர் வேத வுண்மை
கண்டு கொண்டாரே!-அம்மாவோ!

ரிஷி: வலிமை மைந்தன் வேள்வி முன்னோன்
வாய்திறந் தானே!-இந்நேரம்,
மலியு நெய்யுந் தேனுமுண்டு
மகிழ வந்தானே!-இந்நேரம்.

அசு: உயிரை விட்டும் உணவை விட்டும்
ஓடி வந்தோமே!-ஐயோ!நாம்
துயிலுடம்பின் மீதிலுந் தீ
தோன்றி விட்டானே!-அம்மாவோ!

ரிஷி: அமரர் தூதன் சமர நாதன்
ஆர்த் தெழுந்தானே!-இந்நேரம்,
குமரி மைந்தன் எமது வாழ்விற்
கோயில் கொண்டானே!-இந்நேரம்.

அசு: வருணன் மித்ரன் அர்ய மானும்
மதுவை யுண்பாரே-ஐயோ!நாம்
பெருகு தீயின் புகையும் வெப்பும்
பின்னி மாய்வோமே!-அம்மாவோ!

ரிஷி: அமர ரெல்லாம் வந்து நம்முன்
அவிகள் கொண்டாரே!-இந்நேரம்,
நமனு மில்லை பகையு மில்லை
நன்மை கண்டோமே!-இந்நேரம்.

அசு: பகனு மிங்கே யின்ப மெய்திப்
பாடுகின்றானே-ஐயோ!நாம்
புகையில் வீழ இந்திரன் சீர்
பொங்கல் கண்டீரோ!-அம்மாவோ!

ரிஷி:இளையும் வந்தாள் கவிதை வந்தாள்
இரவி வந்தானே!இந்நேரம்,
விளையுமெங்கள் தீயினாலே
மேன்மையுற்றோமே!-இந்நேரம்.

ரிஷி:அன்ன முண்பீர் பாலும் நெய்யும்
அமுது முண்பீரே!-இந்நேரம்,
மின்னி நின்றீர் தேவ ரெங்கள்
வேள்வி கொள்வீரே!-இந்நேரம்.

ரிஷி: சோமமுண்டு தேவர் நல்கும்
ஜோதி பெற்றோமே!-இந்நேரம்,
தீமை தீர்ந்தே வாழி யின்பஞ்
சேர்ந்து விட்டோமே!-இந்நேரம்.

ரிஷி: உடலுயிர்மே லுணர்விலும் தீ
ஓங்கி விட்டானே!-இந்நேரம்,
கடவுளர் தாம் எம்மை வாழ்த்திக்
கை கொடுத்தாரே!-இந்நேரம்.

ரிஷி:எங்கும் வேள்வி அமர ரெங்கும்
யாங்கணுந் தீ!தீ!-இந்நேரம்,
தங்கு மின்பம் அமர வாழ்க்கை
சார்ந்து நின்றோமே!-இந்நேரம்.

ரிஷி: வாழ்க தேவர்! வாழ்க வேள்வி!
மாந்தர் வாழ்வாரே!-இந்நேரம்,
வாழ்க வையம்! வாழ்க வேதம்!
வாழ்க தீ!தீ!தீ!-இந்நேரம்.