அந்திப் பொழுது



காவென்று கத்திடுங் காக்கை-என்தன்
கண்ணுக் கினிய கருநிறக் காக்கை,
மேவிப் பலகிளை மீதில்-இங்கு
விண்ணிடை அந்திப் பொழுதினைக் கண்டே,
கூவித் திரியும் சிலவே;-சில
கூட்டங்கள் கூடித் திசைதொறும் போகும்.
தேவி பராசக்தி யன்னை -வின்ணிற்
செவ்வொளி காட்டிப் பிறைதலைக் கொண்டாள்.

தென்னை மரக்கிளை மீதில்-அங்கோர்
செல்வப் பசுங்கிளி கீச்சிட்டுப் பாயும்
சின்னஞ் சிறிய குருவி-அது
‘ஜிவ்’ வென்று விண்ணிடை யூசலிட் டேகுட்.
மன்னப் பருந்தொ ரிரண்டு-மெல்ல
வட்ட மிட்டுப்பின் நெடுந்தொலை போகும்,
பின்னர் தெருவிலார் சேவல்-அதன்
பேச்சினி லே“சக்தி வேல்” என்று கூவும்.

செவ்வொளி வானில் மறைந்தே-இளந்
தேநில வெங்கும் பொழிந்தது கண்டீர்!
இவ்வள வான பொழுதில் அவள்
ஏறிவந்தே யுச்சி மாடத்தின் மீது,
கொவ்வை யிதழ்நகை வீச,-விழிக்
கோணத்தைக் கொண்டு நிலவைப் பிடித்தான்.
செவ்விது,செவ்விது,பெண்மை!-ஆ!
செவ்விது,செவ்விது,செவ்விது காதல்!

காதலி னாலுயிர் தோன்றும்;-இங்கு
காதலி னாலுயிர் வீரத்தி லேறும்;
காலி னாலறி வெய்தும்-இங்கு
காதல் கவிதைப் பயிரை வளர்க்கும்;
ஆதலி னாலவள் கையைப் -பற்றி
அற்புத மென்றிரு கண்ணிடை யொற்றி
வேதனை யின்றி இருந்தேன்,-அவள்
வீணைக் குரலிலோப் பாட்டிசைத் திட்டாள்.

காதலியின் பாட்டு

கோல மிட்டு விளக்கினை யேற்றிக்
கூடி நின்று பராசக்தி முன்னே
ஓல மிட்டுப் புகழ்ச்சிகள் சொல்வார்
உண்மை கண்டிலர் வையத்து மாக்கள்;
ஞால முற்றும் பராசக்தி தோற்றம்
ஞான மென்ற விளக்கினை யேற்றிக்
கால முற்றுந் தொழுதிடல் வேண்டும்,
காத லென்பதொர் கோயிலின் கண்ணே.