சக்தி விளக்கம்


ஆதிப் பரம்பொருளின் ஊக்கம்-அதை
அன்னை எனப்பணிதல் ஆக்கம்;
சூதில்லை காணுமிந்த நாட்டீர்!மற்றத்
தொல்லை மதங்கள் செய்யும் தூக்கம்.

மூலப் பழம்பொருளின் நாட்டம்-இந்த
மூன்று புவியுமதன் ஆட்டம்;
காலப் பெருங்கள்ததின் மீதே-எங்கள்
காளி நடமுலகக் கூட்டம்


காலை இளவெயிலின் காட்சி-அவள்
கண்ணொளி காட்டுகின்ற மாட்சி;
நீல விசும்பினிடை இரவில்-சுடர்
நேமி யனைத்துமவள் ஆட்சி.


நாரண னென்று பழவேதம்-சொல்லும்
நாயகன் சக்திதிருப் பாதம்;
சேரத் தவம் புரிந்து பெறுவார்-இங்கு
செல்வம் அறிவு சிவபோதம்.

ஆதி சிவனுடைய சக்தி-எங்கள்
அன்னை யருள்பெறுதல் முக்தி;
மீதி உயிரிருக்கும் போதே-அதை
வெல்லல் சுகத்தினுக்கு யுக்தி.

பண்டை விதியுடைய தேவி-வெள்ளைப்
பாரதி யன்னையருள் மேவி,
கண்ட பொருள்விளக்கும் நூல்கள்-பல
கற்றலில் லாதவனோர் பாவி.

மூர்த்திகள் மூன்று பொருள் ஒன்று;-அந்த
மூலப் பொருள் ஒளியின் குன்று;
நேர்த்தி திகழும் அந்த ஒளியை-அந்த
நேரமும் போற்று சக்தி என்று.