பிரபஞ்சவியலில் உலகங்களின் தோற்றமும் உயிர்களின் பிறப்பும்

  வேத மதம் கூறும் பிரபஞ்சவியலில், பிரபஞ்சச் சக்கரத்தின் கால்பங்கேயான தோன்றும் பகுதியில் நான்முகப் பிரம்மன் படைப்பை ஆரம்பிக்கிறார். இந்தப் படைப்பு நிகழும் விதம், பல வகைகளில் ஆங்காங்கே விளக்கப்பட்டுள்ளது. அவற்றுள் நாம் பார்க்கும் பிரபஞ்ச - உலக வகையில் கிரகித்துக் கொள்ளக் கூடிய அடிப்படைகளை இங்கே விளக்குவோம். முதல் அடிப்படை கீதையில் விளக்கப்படுகிறது. (பகவத் கீதை 3, 4-ஆம் அத்தியாயங்கள்.)
இது யக்ஞம் எனப்படும் வேள்வி ரீதியான படைப்பு. யக்ஞம் என்றால் அர்ப்பணிப்பின் வாயிலாக வழிபடுதல் என்று பொருள். வழிபாடு என்பதே அர்ப்பணிப்பு ஆகும். அர்ப்பணிப்பு என்றால் எதையாவது கொடுத்தல் என்று அர்த்தம். எதையாவது ஒன்றைக் கொடுத்தால்தான், பிரதிபலனாக ஒன்று கிடைக்கும். நாம் ஒன்றும் கொடுக்காமல், நமக்கென்று ஒன்றை எடுத்துக் கொண்டால் அது திருட்டுக்குச் சமானம். அதுவே பாபம் என்றும் சொல்லப்படும். அது மட்டுமல்ல, திருப்பிக் கொடுக்காமல் எடுத்துக் கொண்டால், இருப்பு குறைந்து கொண்டே வரும்; மேலும் மேலும் அதனால் கொடுத்துக் கொண்டிருக்க முடியாது.
இந்தக் கருத்துதான் யக்ஞம், ஹோமம், வேள்வி, வழிபாடு, நைவேத்யம், படைப்பு போன்றவற்றுக்கான அடிப்படையானது. இந்த வழிபாட்டை விருப்பு வெறுப்பு இல்லாமல், பற்றிலாமல் செய்ய வேண்டும். படைப்புக் கடவுளான பிரம்ம தேவன் அப்படித்தான் ஆரம்பித்து வைத்தார். ‘ப்ரவர்திதம் சக்ரம்’ என்று அவரால் பரம்பரையாகத் தொடங்கி வைக்கப்பட்ட இந்தச் சக்கரத்தை நாம் அனைவரும் செயல்படுத்திவந்தால்தான் படைப்பு என்பது தொடர்ந்து கொண்டே செல்லும். அது எப்படி என்று பார்ப்போம்.
யக்ஞம் அல்லது ஹோமம் அல்லது வேள்வி என்றால் அங்கே ஹோம குண்டம் இருக்க வேண்டும். அதில் அக்னி இருக்க வேண்டும். அதில் அர்ப்பணிக்க அவிப்பொருள் இருக்க வேண்டும். அந்த அவிப்பொருள் யாரைச் சென்றடைகிறதோ அவர் அதற்குப் பலன் ஒன்றைத் திருப்பி தருகிறார். அந்தப் பலன் பலரையும் சென்றடையும். அப்படிப் பலன் பெறுபவர்கள், இலவசமாகக் கிடைத்தது என்று வாங்கி அனுபவித்தால் மட்டும் போதாது. பிரதிபலனாக திருப்பிச் செய்ய வேண்டும். அப்படிச் செய்யவில்லை என்றால் அது திருட்டுக்குச் சமானம். அது பாபத்தைக் கொடுக்கும். இது எப்படி நடக்கிறது என்று முதலில் உலக வகையில் புரிந்து கொண்டு, பிறகு பிரபஞ்ச அளவில் காணலாம்.உலகம் என்னும் ஹோம குண்டம்
உலகத்தை எடுத்துக் கொண்டால் நீர்-சுழற்சி ஒரு வேள்வி ஆகும். இதில் உலகம் ஹோம குண்டமாகிறது. சூரியனது வெப்பம் அக்னியாகிறது. கடல் மற்றும் நீர் நிலைகளிலிருந்து வெளியாகும் நீராவி அவிப்பொருள் ஆகிறது. இந்த அவிப்பொருள் சென்றடையும் தெய்வம் வருண பகவான் என்னும் மேகம். அவன் இந்திரன் என்னும் தெய்வத்தின் ஆயுதமான வஜ்ராயுதத்தின் (இடி, மின்னல்) உதவியுடன், மித்திரன் என்னும் நட்புத் தெய்வமாக மழை என்னும் பலனைத் தருகிறான்.
இவ்வாறு மழை உண்டாவதே ஒரு வேள்விதான் (கீதை 3-14). இந்த வேள்வி என்பது பிரம்மம் என்னும் முழு முதல் கடவுளிலிருந்து தொடங்கப்பட்டு வருகிறது. தானே தன்னில், தன்னையே அர்ப்பணித்து, தானே உருமாறி, படைப்பை எடுத்துச் செல்கிறது இந்தப் பிரம்மம். (கீதை 4-24)
பிரம்ம வேள்வி என்னும் அந்தப் படைப்பின் பயனாக உண்டாகுவது நீர் ஆகும். அறிவியல் மொழியில் சொல்வதென்றால், நீருக்கு ஆதாரமான ஹைட்ரஜன் உண்டானது இந்த வேள்வியின் பயனாகும். நட்சத்திரங்கள் உருவாகும் விதத்தை நோக்கினால் இந்த ஹைட்ரஜனும் தன் பங்குக்கு வேள்வி என்னும் யக்ஞத்தைச் செய்கிறது என்பது புரியும். தானே, தன்னை, தன்னில் அர்ப்பணித்து, ஹைட்ரஜன் செய்யும் வேள்வியை (thermo nuclear fusion ) நட்சத்திரங்கள் என்னும் ஹோம குண்டங்களில் காணலாம். இடைவிடாமல், எதிர்ரபார்ப்பு இல்லாமல் நிகழும் இந்த வேள்வியின் பயனாக இரும்பு முதலான தாதுப் பொருள்கள் வரை உருவாகி, அடுத்தக் கட்ட படைப்புத் தொடருக்கு வித்திடுகின்றன.
water-cycle

அதன் பயனாக உருவான சூரிய மண்டலத்தில், உலகமே ஹோமக் குண்டமாக இயங்கி நடக்கும் வேள்வியின் பயனாக மழை உண்டாகிறது. மழையிலிருந்து உணவு உண்டாகிறது. உணவிலிருந்து உயிர் உண்டாகிறது. இந்தப் பிரபஞ்சத்தில் எங்கணும் நட்சத்திரங்கள் இருந்தால் மட்டும் போதாது. அவற்றைச் சுற்றும் கிரகங்கள் இருந்தால் மட்டும் போதாது. அங்கே சுழற்சி முகமாக, வேள்வி ரூபமாக, நீர் உண்டாகிக் கொண்டே இருக்க வேண்டும். அப்படிப்பட்ட இடத்தில்தான் உயிர் உண்டாக முடியும்.நால்வகை உயிர்கள்
அப்படி உண்டாகும் உயிர்களும் நான்கு வகைகளில்தான் உருவாக முடியும். (சந்தோக்ய உபநிஷத் - 6 - 3 & பிரம்ம சூத்திரம் - 3-1 -21 முதல் 27 வரை.) இதைக் கூறும் சூடாமணி நிகண்டு சூத்திரமும் தமிழில் உண்டு (12-20). இதன்படி உயிர்கள் கருப்பையிலிருந்து தோன்றுவன, முட்டையிலிருந்து தோன்றுவன, வித்து, வேர் முதலியவற்றிலிருந்து தோன்றுவன, ஈரம், வேர்வை அல்லது கசகசப்பிலிருந்து தோன்றுவன என்று நான்கு வகைக்குள் அடங்கி விடுகின்றன. டார்வின் பரிணாமவியல் போன்ற அறிவியல் கோட்பாடுகளுக்கு முட்டுக்கட்டை போடும் அசட்டுக் கோட்பாடுகள் இவை என்று எண்ணுவதற்குமுன் யோசிக்க வேண்டும்.
டார்வினது பரிணாமவியல் எல்லைக்குட்பட்டது என்று இன்று அறிவியலாளர்கள் ஒத்துக் கொண்டிருக்கின்றார்கள். அந்தப் பரிணாமவியல் அந்தந்த இனத்துக்குள்ளே நிகழ்கிறது. அதன்படி, பாக்டீரியாக்களின் பரிணாமம், பாக்டீரியா இனத்துக்குள் நடக்கிறது. பறவை இனப் பரிணாமம், பறவை இனங்களுக்குள்ளே நடக்கிறது. வேத மதம் கூறுவது நால்வகை அடிப்படை வகைகள். அவ்வவற்றுக்குள்ளே பரிணாம வளர்ச்சியும், மாற்றமும் நடக்க முடியும். வகைகளைத் தாண்டி, வேறு வகையுடன் கூடி அல்லது மாறுபாடு அடைந்து புது வகை உருவாக முடியாது. அப்படி நடந்த ஆராய்ச்சிகள் தோல்வியில் முடிந்துள்ளன.
உருளைக் கிழங்கையும், எருமை மாட்டையும் இணைத்து ஒரு ஆராய்ச்சி முன்பு நடந்தது. (வேத மதக் கோட்பாட்டின்படி இவை இரண்டும் வேறு வேறு வகையைச் சேர்ந்தவை). அதன் பயனாக உருளைக் கிழங்கின் சதைப் பற்றுடன் கூடிய எருமையை உருவாக்க முடிந்தது. அல்லது எருமைத் தோலுடன் கூடிய உருளைக் கிழங்கை உருவாக்க முடிந்தது. பரிணாமம் என்று ஒரு புது வகையை உருவாகக் முடியவில்லை.
பிரபஞ்சத்தில் எங்கு தேடினாலும் வேத மதம் கூறும் இந்த நான்கு வகைக்குள்தான் உயிர்கள் அடங்கும். பூமியின் ஆழத்தில் இருக்கும் வெந்நீர் ஊற்றுகளில் இருக்கும் நுண்ணுயிர்களும், வளி மண்டலத்தில் புழங்கும் நுண்ணுயிர்களும், தலை முடி அழுக்கில் தோன்றும் பேனும் ஒரே வகையைச் சேர்ந்தவை. அவை ஈரம், அல்லது கசகசப்பு இருந்தாலே போதும், தோன்றி விடும். மற்ற உயிர்கள் அப்படிப்பட்டவை அல்ல. அவை உண்டாக நீருடன், நிலமும் காற்றும் வேண்டும்.
இவை தேவை அல்ல; ஸ்டீபன் ஹாகிங் சமீபத்தில் கூறியுள்ளாரே, நட்சத்திரங்களின் மத்தியிலும் வேற்று கிரகவாசிகள் இருக்கலாமே என்று கேட்கலாம். நட்சத்திரங்களின் மத்தியில் வசிக்கும் உயிரினத்தைப் பற்றி வேத மதமும் கூறுகிறது! அந்த உயிரினம் தேவன் என்னும் தெய்வம்! ஹாகிங் அவர்கள் தன்னை அறியாமலேயே வேத மதக் கருத்தைக் கூறியுள்ளார். ஒவ்வொரு தேவனும் ‘நக்ஷத்ராணி ரூபம்’ என்று நட்சத்திர ரூபத்தில் உள்ளான் என்பது வேத வாக்கு.
நமக்கு அருகில் உள்ள நட்சத்திரமான சூரியனில் இருப்பவனும் தேவன் எனப்படும் தெய்வமே என்கிறது வேத மதம். அவனை அடைய ‘மது வித்தை’ என்னும் உபாசனையை மேற்கொள்ள வேண்டும். (பிரம்ம சூத்திரம் 1-3- 30, 31 & 32). அவன் பஞ்ச பூதங்களுக்கும் அப்பாற்பட்ட ஒரு உயிரினம். ஐம்பொறிகளால் பார்க்க முடியாத உயிரினம். அவனை அறிய, அல்லது அடைய மனத்தின் பரிணாம வளர்ச்சியால்தான் முடியும். புறப்பொருள் பரிணாமத்தால் அல்லது பௌதிக உபகரணங்களால் அல்ல. சூரியதேவ உபாசகர்கள், சூரிய கிரகணத்தின் போது, அக்னி குண்டம் மூட்டி அதில் தன்னையே அர்ப்பணித்து சூரிய மண்டலத்தில் இருக்கும் புருஷனை அடைவர் என்று சொல்லப்படும் கருத்தை ஊர்ஜித்தப்படுத்தும் வண்ணம், கர்நாடகத்தின் பல பகுதிகளில் கல்வெட்டு ஆதாரங்கள் கிடைத்துள்ளன.
ஆக, வெளியுலக வாசிகள் என்றால் அவர்கள் தேவ வடிவினர் என்பது வேத மதக் கருத்து. தேவர்கள் என்றால் அவர்கள் வகையில், பித்ருக்கள், சித்தர்கள், கந்தர்வர்கள், வசுக்கள் என்று பல வகையினரும் அடங்குவர். அவர்கள் உடலை ஊனக் கண்ணால் பார்க்க முடியாது. ஆனால் அவர்களுக்கும் உடல் உண்டு.
உடல் கொண்டவை என்னும் அடிப்படையில் நான்கு வகைகளை வேத மதம் கூறுகிறது. அவை தேவன், மனிதன், விலங்குகள், தாவரங்கள். தேவ வகையினர் வாழ பஞ்ச பூதங்கள் தேவையில்லை. மற்ற வகையினருக்கு பஞ்ச பூதங்கள் தேவை. மற்ற மூன்று வகையினரும், மேற்சொன்ன நான்கு வகை உயிர்களாகப் பிறக்கின்றன.யக்ஞ ரூபமான மனிதப் பிறப்பு
மனிதன் ஐந்து அக்னிகள் மூலமாகப் பிறக்கிறான். இதைப் பஞ்சாக்னி வித்தை என்பர். (சந்தோக்ய உபநிஷத் - 5- 4 - 1 முதல் 5 -8 - 2 வரை மற்றும் பிரம்ம சூத்திரம் 3 -1- 22 முதல் 27 வரை.) மனிதப் பிறப்பும் யஞ்ய வழியைச் சேர்ந்தது. ஒன்றிலிருந்து ஒன்றாக அர்ப்பணிக்கப்பட்டு மனிதன் பிறக்கிறான். தன் கர்ம வினைகளுக்கு ஏற்ப, சரீரத்தையும் வாழ்க்கையையும் அனுபவிக்க, பிறப்பெடுக்கத் தயாராகும் ஜீவன் அப்படியே கருப்பைக்குள் நுழைய முடியாது. அது வரும் பாதை ஐந்து அக்னிகள் வாயிலான ஹோமத்தின் அர்ப்பணிப்பு போன்றது.
  • முதல் அக்னி மழை. நெருப்பை அணைக்கும் சக்தி மழைக்கு (நீருக்கு) இருப்பதால், அந்த நெருப்பை உள்வாங்கி அதை அணைப்பதால் நீரும் அக்னி என்ப்படுகிறது. பிறக்கத் தயாராகும் ஜீவன் மழையோடு கலந்து பூமியில் விழுகிறது.
  • இரண்டாவது அக்னி பூமி. உஷ்ணத்தை உள்வாங்கிக் கொள்வதால் பூமியும் ஒரு அக்னி. மழை மூலமாக வந்த ஜீவன் பூமிக்குள் செல்கிறது.
  • பூமிக்குள் சென்ற ஜீவன் செடிக்குள் நுழைகிறான். செடி மூன்றாவது அக்னி. அதனுள் இடைவிடாது செயலாக்கம் நடந்து கொண்டிருப்பதால் அது உஷ்ணத்துடன் இருக்கிறது. எனவே அதுவும் அக்னி எனப்படுகிறது. செடியின் வேர் வாயிலாக நுழையும் ஜீவன் அந்தச் செடியின் காய் அல்லது கனியில் நிலை கொள்கிறான்.
  • பூமிக்குள் வரும் வரை ஜீவனால் திரும்பிச் செல்ல முடியும். பிறப்பெடுப்பது ஜீவனது விருப்பம் மற்றும் ஒத்துழைப்புடன்தான் நடக்கிறது. கர்மவினையை அனுபவிக்கப் பிறக்கத் தயாராகும் ஜீவனே இப்படி இறங்கி வருகிறது. செடி என்னும் மூன்றாவது அக்னியில் நுழைந்தவுடன், அந்த ஜீவனால் திரும்பிச் செல்லுதல் முடியாது. பாதைக்குள் நுழைந்தாகிவிட்ட நிலை. பயணத்தைத் தொடர்ந்துதான் ஆகவேண்டும்.
  • ஜீவன் நிலை பெற்ற காய் அல்லது கனியை உண்ணும் ஆண் நான்காவது அக்னி. அவனது உணவுக் குழாய் மூலமாகச் சென்று அவனது விந்தில் அந்த ஜீவன் நிலைபெறுகிறது. அப்படி அது விந்தில் இருக்கும் காலம் இரண்டு மாதங்கள். இது வரை வந்த எந்த நிலையிலும் ஜீவனுக்கு இன்ப துன்பம் என்னும் எந்த அனுபவமும் கிடையாது.
  • அந்த ஆணிலிருந்து பெண்ணின் கருப்பைக்கு விந்து செல்கிறது. அந்தப் பெண் ஐந்தாவது அக்னி. கர்ப்பத்தில் நுழைந்த நொடியில் ஜீவன் பிறந்தவனாகிறான். ஆகவே உயிர் என்பது கரு உண்டான நேரத்தில் உண்டாவது. அங்கேயே அதன் கர்ம வினைப்படியான இன்ப துன்பங்கள் ஆரம்பிக்கின்றன.
சில மணி நேரக் கருவைக் கொல்வதும் சிசுஹத்திதான். கருச்சிதைவு செய்தல் என்பதும் சிசுஹத்திதான்.
இதில் தெரியும் மற்றொரு உண்மை, கருத் தரித்தல் என்பது எதேச்சையானது அல்ல, எதிர்பாராதவிதமாக அமைவதும் அல்ல. ஒரு கரு உருவாவதற்கு முன் இரண்டு மாதங்கள் அந்த ஜீவன் தந்தை உடலில் இருக்கிறது. அதற்கு முன் மூன்று அக்னி வாயிலாகவும் இறங்கி வர கால அவகாசம் தேவைப்படுகிறது. எனவே ஒவ்வொரு பிறப்பும் திட்டமிட்ட பிறப்பே.
ஆனால் பிறப்பு என்பது ஒரு ஜீவனுக்கு மூன்று விதமாக அமைகிறது என்று ஐதரேய உபநிஷத் (2-3 & 4) கூறுகிறது. தந்தையிடமிருந்து தாயிடம் புகுந்தது முதல் பிறப்பு. தாயிடமிருந்து உலகில் பிறந்தது இரண்டாவது பிறப்பு. இறக்கும் பொழுது மற்றொரு இடத்தில் பிறப்பதால், அந்த உலகில் பிறப்பது மூன்றாவது பிறப்பு.
இதில் முதல் இரண்டு பிறப்பும் எடுத்துக் கொள்ளும் காலம் = தந்தை உடலில் 2 மாதங்கள் + தாய் உடலில் 10 மாதங்கள். இதில் தந்தை உடலில் செல்லாமல் தாயின் உடலில் முழு காலமும் இருந்ததால், ராமனும் அவன் சகோதரர்களும் கர்ப்பத்தில் இருந்த காலம் 12 மாதங்கள். அவர்கள் பஞ்சாக்னியில் முதல் மூன்று அக்னி வாயிலாக வரவில்லை.
அதே போல கடைசி அக்னியையும் தவிர்த்து பிறப்புகள் நிகழலாம் என்று வேத மதம் கூறுகிறது. (பிரம்ம சூத்திரம் 3 - 1 - 19 ) மனிதர்களுள் அப்படிப் பிறந்தவர்கள் துரோணர், திரௌபதி, திருஷ்டத்யும்னன் போன்றோர். அவர்கள் ஐந்தாம் அக்னியான தாய் மூலமாகப் பிறக்கவில்லை. Parthenogenesis என்னும் முறையில், ஐந்தாவது அக்னி இல்லாமல் கருவில் தோன்றும் விலங்கு உயிரினங்கள் உள்ளன. பொதுவாக கருவில் தோன்றும் உயிரினங்கள் பஞ்சாக்னி முறையில் தோன்றுபவையே.
ஐந்தாவது அக்னி இல்லாமல் தோன்றும் பிறப்பு cloning முறையில் நிகழ்வதையும் காணலாம். தாயின் கருவை எடுத்துக் கொள்ளாமல் பிறப்பது ஐந்தாவது அக்னியைத் தவிர்த்துப் பிறப்பதற்கு ஒப்பாகும்.
இப்படி நிகழும் பிறப்பும், யஞ்ய ரூபமாக, அவிப்பொருளை அர்ப்பணிப்பதைப் போல அர்ப்பணிக்கப்பட்டு பிறக்கிறது. அப்படிப் பிறக்கும் சரீரமும் ஒரு ஹோம குண்டத்துக்கு ஒப்பாகும் என்று வேத மதம் கூறுகிறது. ‘அக்னயோஹ்யத்ர ச்ரியந்தே’ என்று கர்ப்ப உபநிஷத் கூறுகிறது. ஞானாக்னி, தர்சனாக்னி, கோஷ்டாக்னி என்னும் அக்னிகள் இதை ஆச்ரயித்து இருப்பதால், இது சரீரம் என்னும் பெயர் பெற்றது என்கிறது இந்த உபநிஷத். உண்ணும் உணவு பக்குவப் படுத்தப்படுவது முதல், அறிவு பட்டை தீட்டப்படுவது வரை, நம் உடலில் பல அக்னிகளால் இடைவிடாது யாகம் நடத்தப்படுகிறது என்கிறது இந்த உபநிஷத்.
இப்படியாக ரூபமாக உயிர்கள் இயங்குகின்றன. படைப்பின் ஆரம்பம் முதலாக நடைபெற்று வரும் யாகத்தால் தோற்றம் பெரும் பிரகிருதி என்னும் அசேதனப் பொருள்கள் ஒன்றுக்குள் ஒன்றாக, ஒன்றுடன் ஒன்றாக, அர்ப்பணிக்கப்பட்டு, நட்சத்திர மண்டலங்களும் கிரகங்களுமாக உருவாகி வருகின்றன. இந்த யாகத்தின் பயன், உயிர் தோன்றுவதற்கான சூழ்நிலையை உருவாக்குதல்.
இன்றைக்கு நாம் வாழ்கிறோம் என்றால், நாம் இருக்கும் உலகம், உயிர்களைத் தாங்கி, அவற்றின் கர்ம வினைகளைக் கழிக்க உதவுகிறது என்றால், அதன் ஆரம்பம் படைப்பின் ஆரம்பத்திலேயே உண்டான இடைவிடாத செயல்பாடுதான். அந்தச் செயல்பாட்டின் பயனை மனிதர்களாகிய நாம் அனுபவித்துக் கொண்டிருக்கிறோம். ஒரு பயனை நாம் அனுபவித்தால், அதற்குப் பிரதியாக நாமும் ஏதேனும் தர வேண்டும். அப்படித் தரவில்லை என்றால், நாம் திருடர்களாக ஆவோம், பாபிகளாக ஆவோம். அதற்கென வேத மதம் சில யாகங்களைச் செய்யுமாறு மனிதர்களுக்கு விதித்துள்ளது.மனிதர்கள் செய்ய வேண்டிய யக்ஞங்கள்
பிறப்பெடுத்த ஒவ்வொருவனும் தினமும் செய்ய வேண்டிய யக்ஞங்கள் ஐந்து. அவை பஞ்ச யக்ஞங்கள் எனப்படுகின்றன. அவையாவன:-
                                                                                                        1. பிரம்ம யக்ஞம்
brahmamமுழு முதல் கடவுளான பிரம்மன் ஆரம்பித்து வைத்த யக்ஞத்தினால்தான் இன்று உலகம் இருக்கிறது. நாமும் வாழ்கிறோம். அந்தப் பயனைப் பெற்றதற்குப் பிரதியாக நாமும் அந்தப் பிரம்மத்திற்கு திருப்பித்தர வேண்டும். அதுவே பிரம்ம யக்ஞம். சிந்தனையாலும், தோத்திரத்தாலும், பூஜையாலும், பாடலாலும் ஏதேனும் ஒரு வகையில் அந்தப் பிரம்மனுக்கு நன்றிகூற வேண்டும். அல்லது நினவுகூர வேண்டும். அவரவர்க்கு உகந்த தெய்வத்தையோ அல்லது விரும்பும் தெய்வத்தையோ பிரம்மமாகப் பாவித்து வணங்கலாம். எல்லாத் தெய்வங்களும் பிரம்மத்தின் அடையாளங்கள் அல்லது பகுதிகளாக இருப்பதால், தெய்வ வழிபாடு பிரம்ம யக்ஞம் ஆகிறது. அந்தத் தெய்வத்தை முழு முதல் பிரம்மமாக நினைத்து வழிபடலாம். நாம் அனுபவிப்பதன் அடையாளமாக பழமோ, பூவோ, இலையோ, அல்லது நீரோ தருவது இந்தப் பிரம்ம யக்ஞத்தில் சேர்க்கப்படும் அவிப்பொருள் ஆகும்.
இங்கே ஒரு விஷயத்தை நாம் அறிய வேண்டும். அவிப்பொருள் போல அளிக்கப்படும் நைவேத்யத்தை, இறைவன் எதிர்பார்த்து இருக்கவில்லை. அப்படிக் கொடுத்தால்தான் அவன் நமக்கு நன்மைகளைத் தருவான் என்பதும் இல்லை. அவனுக்குப் பசியும் இல்லை. இங்கே சொல்லப்பட்ட யக்ஞ வழியில் அப்படி அளிக்க வேண்டியது நமது கடமை.
பொதுவாகவே தெய்வம், அரசன், குரு, குழந்தை இவர்களைப் பார்க்கப்போகும்போது வெறும் கையுடன் போகக் கூடாது. ஏதேனும் அவர்களுக்கு உகந்ததை எடுத்துச் சென்று அவர்களிடம் கொடுக்க வேண்டும். ஏனென்றால், நம்மைப் பார்த்தவுடன், பிரதிபலன் எதிர்பாராமல் நமக்கு ஏதேனும் இவர்கள் தருவார்கள். குழந்தை சந்தோஷத்தையும், மன நிறைவையும் தருகிறது. அதற்குக் கைம்மாறு நாம் செய்ய வேண்டும்.2. தேவ-ரிஷி யக்ஞம்
dev-rishisபிரபஞ்சத்தைப் பற்றிய, பிரம்மத்தைப் பற்றிய அறிவை உலகுக்குக் கொடுத்தவர்கள் தேவர்களும், ரிஷிகளும் ஆவார்கள். அவர்களுக்குச் செய்யும் கைம்மாறு இந்த யக்ஞம். அவர்களையும் தினமும் நினைக்க வேண்டும். அவர்கள் கொடுத்துள்ள ஸ்லோகங்கள், பாடல்கள், புராணக் கதைகளைச் சொல்வதன் மூலம் இந்த யக்ஞத்தைச் செய்கிறோம். நாயன்மார்கள், ஆழ்வார்கள் கொடுத்த பாசுரங்களைப் பாடுவதன் மூலமும், தேவ, ரிஷிகளான அவர்களை நினைவுகூர்ந்து இந்த யக்ஞத்தைச் செய்தவர்களாவோம்.                                                              3.பித்ரு யக்ஞம்
pithru-karma
தந்தை மூலமாகத் தாயிடத்தில் பிறந்ததே ஒரு யக்ஞம்தான். அதற்குப் பிரதிபலனாக, அவர்களை நினைவுகூர வேண்டும். மறைந்த முன்னோர்களுக்காகச் சில நிமிடமேனும் சிந்தையைச் செலுத்தி, அவர்கள் இருக்கும் உலகில் சிறப்பாக இருக்க வேண்டும் என்று எண்ண வேண்டும்.4. பூத யக்ஞம்
crowநம் பிறப்புக்கு வழிப்பாதையாக அமைந்தது தாவர வகை. இந்த உலகத்தில் நடைபெறும் பலவித சுழற்சிகளுக்கு, தாவரங்களும் விலங்குகளும் காரணமாகின்றன. அவற்றால் நாம் பெரும் பயன்கள் எத்தனையோ. அதனால் அவற்றுக்கும் நாம் நன்றி செலுத்தும் விதமாக பிரத்யுபகாரம் செய்ய வேண்டும். அவற்றுக்குத் தரும் நீரும், உணவும், காட்டும் அக்கறையும் பூத யக்ஞம் எனப்படும். தினமும் ஒரு செடிக்கேனும் நீர் ஊற்ற வேண்டும். ஒரு நாய்க்கோ, பறவைக்கோ உணவிட வேண்டும்.5.மனித யக்ஞம்
தனியாகப் பிறக்கிறோம்; தனியாகப் போகிறோம். ஆனால் இடையில் வாழும் நாள் முழுவதும் மனிதர்கள் பலரது தயவில் வாழ்கிறோம். இதை எழுதும் கணினியும் எதோ ஒரு மனிதன் எடுத்துக் கொண்ட ஒரு முயற்சியால், வேலையால் கிடைத்துள்ளது என்பதை உணர வேண்டும். நேரிடையாகவோ, மறைமுகமாகவோ பல மனிதர்கள் நம் வாழ்கையை நாம் வாழத் துணைபுரிகின்றனர். அதற்குப் பிரதிபலனாக, ஒரு மனிதனுக்கேனும் உணவிட்டுத் தான் நம் உணவை நாம் உண்ண வேண்டும். அதிதி போஜனம் எனப்படும் இந்த மனித யக்ஞத்தில், நமக்குச் சம்பந்தம் இல்லாத ஒருவருக்காவது தினமும் உணவு கொடுக்க வேண்டும்.
இப்படி உணவிட்ட சமுதாயம்தான் நமது சமுதாயம். இதனால் பசிக் கொடுமை இருக்கவில்லை. ஒருவருக்கொருவர் செய்து கொள்வதால் எல்லாரும் குறைவின்றி வாழ முடிந்தது. இயற்கை பேணப்பட்டது. படைப்பும் குறைவின்றி நடக்க ஏதுவானது.

இந்த பஞ்ச யக்ஞங்களும் அனைத்து குடும்பஸ்தரும் செய்ய வேண்டியது என்று தர்ம சாத்திரங்கள் சொல்கின்றன. ஒவ்வொரு குடும்பஸ்தனின் வீடும் ஒரு கொலைக் களம் போல் உள்ளது என்கின்றன தர்ம நூல்கள்.  வீட்டில் அடுப்பு எரிப்பதாலும், நீர் கொதிக்க வைப்பதாலும், உணவு சமைப்பதாலும், மாவு அரைப்பதாலும், வீட்டை விளக்குவதாலும் - இப்படி ஐந்து வழிகளில் பல நுண்ணுயிர்கள் கொல்லப்படுகின்றன. எனவே குடும்பஸ்தனின் வீடு ‘சூனா’ எனப்படும் கொலைக் களம் போல இருக்கிறது. கொல்லுதல் பாபத்தை உண்டாக்குவது. ஆனால் அறியாமலும், வேறு வழியில்லாமலும் இங்கே நுண்ணுயிர்கள் கொல்லப்படுவதால், அதற்குப் பிராயச்சித்தமாக தினமும் இந்த பஞ்ச யக்ஞங்கள் செய்ய வேண்டும் என்று தர்ம நூல்கள் சொல்லுகின்றன.
யக்ஞமாகச் செய்ய வேண்டும் என்று சொல்லப்பட்டுள்ளது சிறப்பு வாய்ந்தது. பொதுவாகவே நம் மக்களுக்கு ஒரு கருத்து இருக்கிறது - இந்து மதத்தில் தொண்டுள்ளம் போதிக்கப்படுவதில்லை; மாறாக பிற மதத்தில் தொண்டு (service) என்பது முக்கியமாக உள்ளது என்ற நினைக்கிறார்கள். அல்லது நினைக்க வைத்துள்ளார்கள்.
மேலே விவரித்துள்ளதைப் பாருங்கள். இந்து மதம் படைப்பு முதற்கொண்டு கவனம் செலுத்தி, படைப்பின் கடைசியில் உள்ள எல்லா உயிர்களுக்கும் உதவி செய்ய வேண்டும் என்பதை தினசரி கடமையாக விதித்துள்ளது. கடமைக்கும் (duty) , தொண்டுக்கும் (service) வித்தியாசம் உண்டு. நம் கடமையை நாம் ஆற்ற வேண்டி, நாம் தரும் உணவை மனித யக்ஞம் என்று ஒருவர் பெற்றுக் கொள்ளும் போது, அவர் நமக்காக உதவி செய்கிறார் என்றாகிறது. உதவியைப் பெற்றுக் கொள்பவர் நாம் என்று ஆகிறோம். அதனால் அவர் நிலை உயர்வாகவும், நாம் பணிவுடனும் இருக்க வேண்டி வரும். அதாவது, நாம் கொடுப்பதை பணிவோடு கொடுப்போம். அவர்கள் பெருமிதத்தோடு பெற்றுக் கொள்வர். நம் கை தாழ்ந்தும் அவர்கள் கை உயர்ந்தும் இருக்கும்.
ஆனால் பிற மதத்தவர் பின்பற்றும் தொண்டு என்னும் கொள்கையைப் பாருங்கள். அங்கே கொடுப்பவன் கை ஓங்கி இருக்கும். வாங்குபவர் கை தாழ்ந்து, பணிவுடன் இருக்கும். வாங்குபவருக்கு அங்கே பெருமிதம் இருக்காது.
அது இல்லாதவனுக்கு, இருப்பவன் செய்வது போன்றது. அதையே கடமை என்னும் யக்ஞமாகச் செய்யும் போது இல்லாமை, இருப்பது போன்ற எண்ணங்கள் வராது. ஒருவருக்கொருவர் பரஸ்பரம் செய்துகொள்கிறோம் என்ற எண்ணம்தான் வரும். பிறர் கடமையை ஆற்ற வாங்கிக் கொள்கிறேன் என்று வாங்குபவர், சுயமரியாதை இழக்காமல், பெருமிதத்துடன் வாங்கிக் கொள்வார்.
இப்படிக் கவனமுடன் ஏற்படுத்தப்பட்ட பஞ்ச யக்ஞங்கள் ஒவ்வொரு இந்துவும் செய்ய வேண்டியது. இது கடமை. இதைத் தொண்டு என்று சொல்லப்படவில்லை. தொண்டு என்பது இறைவனுக்குச் செய்வது. இந்து மதம் சொல்லும் தொண்டு அடியவர்க்கு அடியானாக, மிகவும் சாதாரணனாகத் தன்னை பாவித்துக் கொண்டு, இறைவன் புகழ் நிலைக்க வைக்க என்னவெல்லாம் செய்ய வேண்டுமோ அவற்றைச் செய்வதே. படைத்தவனுக்குச் செய்வது தொண்டு. படைப்பு தொடர்ந்து இயங்கச் செய்வது கடமை.