இந்தியாவின் முதல் நவீன நூலகம் உங்கள் பார்வைக்கு


  கால வெள்ளத்தில் நூறாண்டுகள் என்பது சின்னஞ்சிறு துளி. ஆனால் ஒரு மனிதனின் வாழ்விலும் ஒரு நிறுவனத்தின் வாழ்விலும் அது மிகப்பெரிய விஷயம். எல்லாமே வேகமாக மாறிவரும் இன்றைய நிலையில் ஒரு நிறுவனம் நூறு ஆண்டுகளைக் கடப்பது என்பது மிகவும் அபூர்வமாகி வருகிறது. காலத்தின் மாற்றங்களுக்கு ஏற்பத் தன்னைத் தகவமைத்துக் கொள்பவைகளே நீடித்து நிலைத்து நிற்கும். அவ்வாறு நிலைத்து நூற்றாண்டு கண்டு தொடர்ந்து கொண்டிருக்கும் நிறுவனங்களில் ஒன்று கன்னிமாரா நூலகம்.
இன்று பல லட்சம் புத்தகங்களுடன் தேசிய நூல் களஞ்சியமாக இருக்கும் கன்னிமாரா உதயமானதற்கு அதிகப்படியாக இருந்த சில நூறு நூல்கள்தான் காரணம் என்றால் ஆச்சரியப்படுவீர்கள். கன்னிமாரா உதயமான கதையை அறிய நாம் 19-ம் நூற்றாண்டுக்குப் போக வேண்டும்.
இங்கிலாந்தில் உள்ள ஹெய்ல்பரி கல்லூரியில் அவர்கள் தேவைகளுக்கு மேல் நிறைய புத்தகங்கள் இருந்தன. அப்புத்தகங்களை இந்தியாவிற்கு அனுப்பலாம் என அவர்கள் முடிவெடுத்தார்கள். 1861 ல் அப்புத்தகங்கள் மெட்ராஸிற்கு வந்து சேர்ந்தன. வந்த புத்தகங்கள் அனைத்தும் சென்னை மியூசியத்தில் ஒப்படைக்கப்பட்டன. 1890 வரை அப்புத்தகங்கள் அங்கேதான் இருந்திருக்கின்றன.
1890-ல் மெட்ராஸில் கவர்னராக கன்னிமாரா பிரபு இருந்தார். அவர் வாசிப்புகளில் நாட்டம் கொண்டவர். மெட்ராஸிற்கு தரமான பொது நூலகம் ஒன்று வேண்டுமென்ற எண்ணம் அவர் மனதில் நெடுநாட்களாக ஓடிக்கொண்டிருந்தது. அதற்கேற்ப மியூசியத்தில் அதிகமாகிவிட்ட புத்தகங்களை வைக்கத் தனிக் கட்டிடம் வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. 1890 ல் புதிய பொது நூலகத்திற்கான அடிக்கல்லை நாட்டினார் கன்னிமாரா. 1896 டிசம்பர் 5ஆம் நாள் நூலக்கட்டிடம் திறக்கப்பட்டது. அப்போது ஆர்தர் ஹாவ்லக் ஆளுநராக இருந்தார். எனினும் நூலகம் தோன்றக் காரணமாக இருந்த கன்னிமாராவின் பெயரையே நூலகத்திற்கு அவர் வைத்தார். இப்படித்தான் சென்னையில் பெருமைமிகு கன்னிமாரா நூலகம் உருவானது.
சில ஆயிரக்கணக்கான புத்தகங்களுடன் தொடங்கப்பட்ட கன்னிமாரா நூலகத்தில் இன்று ஆறு லட்சம் புத்தகங்களுக்கு மேல் இருக்கின்றன. சென்னைக்குப் பல பெருமைகள் இருந்தாலும் அறிவுக் களஞ்சியமாக விளங்கும் கன்னிமாரா அதில் முதன்மையான இடத்தைப் பெறத் தகுதியானதாக இருக்கிறது.
1954ல் கன்னிமாரா தேசிய நூலகமாக அறிவிக்கப்பட்டது. கல்கத்தா, பம்பாய், டெல்லி, சென்னை என இந்தியாவில் நான்கே நான்கு தேசிய நூலகங்கள்தான் உள்ளன.
கன்னிமாரா தேசிய நூலகக் களஞ்சியமாக இருப்பதால் இந்தியாவில் வெளியிடப்படும் அனைத்து நாளிதழ்கள், பத்திரிகைகள், புத்தகங்கள் ஆகியவற்றின் ஒரு பிரதியை பெற்றுப் பாதுகாக்கிறது. பதிப்பாளர்கள் கண்டிப்பாக புத்தக்த்தின் ஒரு பிரதியை இங்கு அனுப்ப வேண்டும்.
கன்னிமாராவில் மாணவர்களுக்கான பாடப்புத்தகங்கள் தொடங்கி அறிவியல், மருத்துவம், சட்டம், பொறியியல், இலக்கியம் என எல்லாத் துறை நூல்களும் கிடைக்கின்றன.
இந்நூலகத்தில் பல நூற்றாண்டுகளுக்கு முந்தைய பல அரிய புத்தகங்கள் உள்ளன. 1608-ல் பிரசுரிக்கப்பட்ட பைபிள், 1781 ல் புதிப்பிக்கப்பட்ட ஞான முறைமைகளின் விளக்கம். இது போன்ற நூற்றாண்டுகளைக் கடந்த பல அரிய புத்தகங்கள் இங்கு உள்ளன. வருடத்தில் 9 நாட்கள் தவிர மீதி நாட்கள் முழுவதும் இடையறாது இயங்குகிறது கன்னிமாரா.
இந்த நூலக்த்திற்கு 70 ஆயிரம் ஆயுள் கால உறுப்பினர்கள் உள்ளார்கள். தினமும் ஆயிரக்கணக்கானோர் இந்த நூலகத்தைப் பயன்படுத்துகிறார்கள்.
அறிஞர் அண்ணா தன் மாணவப் பருவத்தில் பெரும் பகுதி நேரத்தை இந்த நூலகத்தில் செலவிட்டுள்ளார். முதல் ஆளாக நுழைபவர் நூலகம் நேரம் முடிந்துவிட்டது கிளம்புங்கள் என்று சொல்லும் வரை படித்துக்கொண்டிருப்பாராம்.
நூலகம் என்பது மனித இனத்தின் டைரி என்பார்கள். ஒரு வாசகர் நூலகத்தில் அமர்ந்திருக்கும் அந்த சில மணி நேரங்களில் வேறெங்கும் கற்க முடியாத விஷயங்களைக் கற்றுக்கொள்கிறார். புத்தகங்களைப் போன்ற பொறுமை சாலிகள் உலகில் யாருமில்லை. தன் வாசகர்களுக்காகப் பல ஆண்டுகள் காத்துக் கிடக்கின்றன.
113 வயதான கன்னிமாரா, முதுமையின் ஞானத்தோடும் தற்போதைய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திக்கொள்வதால் இளமைக்குரிய துடிப்போடும் இயங்கிவருகிறது. வாசகர்களின் வசதிக்காக புத்தகங்களை ஜெராக்ஸ் எடுக்கும் வசதியும், இன்டர்நெட் மையமும் நூலகத்தில் உள்ளன. பார்வையற்றோர் மற்றும் காது கேளாதோருக்கான பிரெய்ஸி மற்றும் பேசும் புத்தகச் சேவையும் உள்ளது.