தமிழகம் வருகிறார் ஜாக்கிசான்

                                      தமிழகம் வருகிறார் ஜாக்கிசான்


ஹாலிவுட்டுக்குப் போகாமலேயே, ஹாங்காங்கிலும் சீனாவிலும் இருந்தபடி அதிரடிப் படங்களில் நடித்து தயாரித்து இயக்கி வெற்றி கண்டு வருபவர் ஜாக்கி சான்.

வட அமெரிக்காவில் அதிக வசூலைக் குவிக்கும் ஹாலிவுட்டைச் சேராத ஒரே ஆசிய நட்சத்திரம் இவர்தான்.

மூன்று ஆண்டுகளுக்கு முன் கமல் நடித்த தசாவதாரம் படத்தின் பாடல் வெளியீட்டுக்காக சென்னை வந்தார் ஜாக்கி சான். முதல்வர் கருணாநிதி, பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன் ஆகியோருடன் மேடையில் தோன்றினார்.

ஆடியோ வெளியீட்டின் போது, மாதிரி சி.டி.யின் மேல் சுற்றப்பட்டிருந்த பேப்பர் உறையை நம்ம ஊர் வழக்கப்படி கழற்றிப் போட்டு விட்டு, அடுத்த வேலையில் அவரவர் பிஸியாக இருக்க, ஜாக்கி சான் மட்டும் பொறுப்பாக அந்த பேப்பரை எடுத்துப் போய் மேடைக்கு பின்புறம் போட்டார். அவரது இந்த பண்பைக் கண்டு மேடையிலிருந்து பலரும் வெட்கித் தலைகுனிந்தது நினைவிருக்கலாம்.

இப்போது மீண்டும் இரண்டாவது முறையாக சென்னை வருகிறார் ஜாக்கி. முன்பு அவரை சென்னைக்கு அழைத்து வந்தவர் ஆஸ்கர் பிலிம்ஸ் ரவிச்சந்திரன். இப்போது அழைத்து வருபவர் ரவிச்சந்திரனின் அண்ணன் விஸ்வாஸ் சுந்தர்.

ஜாக்கி நடித்து விரைவில் வெளியாக உள்ள `லிட்டில் பிக் சோல்ஜர்` படத்தின் இந்திய உரிமையை அவர் பெற்றுள்ளார். இந்தப் படம் தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியாகிறது. படத்தின் ஆங்கில - தமிழ் பிரத்தியேகக் காட்சி சென்னை உள்ளிட்ட மூன்று நகரங்களில் நடக்கிறது. இந்தக் காட்சிகளுக்கு கட்டாயம் வருவதாக சுந்தரிடம் வாக்களித்துள்ளாராம் ஜாக்கிசான்.