'அம்பாசமுத்திரம் அம்பானி'

                                                 'அம்பாசமுத்திரம் அம்பானி'

                                                           திரை விமர்சனம் 

     அம்பானி போன்று ஒரு தொழிலதிபராக வேண்டும் என்று ஆசைப்படும் ஒரு சாமனியனின் கதை. முதல் படத்தைப் போலவே இந்த படத்திலும் கதையின் நாயகனாக வரும் கருணாஸின் அம்பானியாகும் ஆசையை, எதார்த்தமாக படமாக்கியிருக்கிறார் இயக்குநர் ராம்நாத்.

அம்பாசமுத்திரத்திலிருந்து நிராயுதபாணியாக சென்னைக்கு வரும் கருணாஸ், பேப்பர் போட்டு சென்னையில் தனது வாழ்க்கையை தொடங்கும் கருணாஸின் ஒரே லட்சியம் அம்பானி ஆவதுதான். இப்படி ஆசைப்படும் கருணாஸ் அம்பானி ஆகவில்லை என்றாலும் ஒரு சூப்பர் மார்கெட்டுக்கு முதலாளியாகிறார். அம்பானி ஆக வேண்டும் என்று ஆசைப்பட்டால்தான் அட்லீஸ்ட் ஒரு சூப்பர் மார்கெட்டுக்கு முதலாளியாக முடியும் என்று படத்தை முடிக்கிறார்கள்.

இப்படி ஒன்னும் இல்லாதவனாக சென்னைக்கு வரும் கருணாஸின் உழைப்பு அவரை எப்படி முதலாளியாக்குகிறது என்பதுதான் படம். இதற்கு நடுவே காதல், கல்யாணம் என சில கமர்ஷியல் அம்சங்களும் இருந்தாலும் அவற்றை காட்சிக்கு காட்சி சரியாக பயன்படுத்தி படத்தை சுவாரஸ்யமாக நகர்த்தி சென்றிருக்கிறார் இயக்குநர் ராம்நாத்.

முதல் படத்தை போலாவே இப்படத்தில் கதையின் நாயகனாக வந்து கலக்கும் கருணாஸ், சென்டிமென்ட், காதல், காமெடி என பிண்ணியிருக்கிறார். அதுவும் கோட்டாசீனிவாச ராவிடம் பணத்தை கொடுக்கும் கருணாஸ், கோட்டாசீனிவாச ராவ் இறந்தவுடன், 'போச்சே... போசே...' என்று தெருவில் விழுந்து அழுவும் காட்சியில் அமர்க்களப்படுத்தி இருக்கிறார்.

கவர்ச்சியுடன் நடிப்பிலும் வெளுத்து கட்டியிருக்கிறார் நவ்னீத் கவுர். கருணாஸுடன் ஜோடி சேர்ந்ததால் என்னவோ இவரும் ஒரு காமெடி கரகாட்டத்தை ஆடியிருக்கிறார். இவரை காதலிக்கும் மற்றொரு இளைஞராக வரும் லிவிங்ஸ்டன் இடம்பெறுக் காட்சிகளும் திரையரங்கை அதிர வைக்கிறது. செல்போனுக்கு ரீசார்ஜ் செய்யும்போது ஒரு நம்பரை தவறாக போட்டுவிட்டு அந்த பணத்தை ஒவ்வொரு முறையும் நேரில் வந்து போன் பேசிக்கழிக்கும் மயில்சாமியும் கலகலக்க வைக்கிறார்.

டில்லி கணேஷ், மகளை எப்படியாவது போலீஸ் அதிகாரியாக்க வேண்டும் என்று ஆசைப்பட்டு ஏரியாவையே அலரவைக்கும் தந்தையாக வரும் ஹனிபா போன்றவர்களும் ரசிகர்களை சிரிக்க வைத்திருக்கிறார்கள். கோட்டாசீனிவாச ராவின் மகனாக வரும் சேரன் ராஜ் முதலில் வில்லன் போன்று சித்தரிக்கப்பட்டாலும் இறுதிக்காட்சியில் 'நாங்க கெட்டவங்கதான் ஆனா அது கெட்டவங்களுக்குதான் உனக்கு இல்ல' என்று கருணாஸிடம் கூறி தனது கதாபாத்திரத்தை ரசிகர்களின் மனதில் பதியவைக்கிறார்.

படத்தில் எதிர்பாராத திருப்பம் கருணாஸின் கூடவே இருக்கும் சிறுவன் செய்கிற வழிப்பறிதான். அப்படி செய்தவனை காவல் நிலையத்தில் 'உனக்கும் பணத்தேவை இருக்கும் என்று எனக்கு தெரியாமல் போனது. ஆனால் நீ எப்போது இந்த நிலைக்கு வந்தியோ அப்பதான் நான் புரிஞ்சிக்கிட்டேன் உனக்கும் பணத்தேவை இருக்குன்னு' என்று கூறி அவனிடம் இரண்டு லட்சத்தை கொடுத்து விட்டு செல்லும் கருணாஸின், காலை பிடித்துக்கொண்டு கதறும் சிறுவனும் படத்தை இன்னும் மெறுகேற்றியிருக்கிறார்கள்.

இசை கருணாஸ், ராப், நாட்டுப்புற பாடல், மொலோடி என அனைத்து ரகத்திலும் ஒவ்வொரு பாடல்கள் இதில் "பூ பூக்கும் தருணம்.." என்ற பாடல் முனுமுனுக்க வைக்கிறது. புலித்தேவனின் ஒளிப்பதிவும் படத்திற்கு ஏற்ப இருக்கிறது.

கருணாஸ் படத்தில் அம்பானியாகிறாரோ இல்லையோ, ஆனால் இப்படத்தின் மூலம் மறுபடியும் தன்னை கதையின் நாயகனாக நிருபித்து மக்களின் மனதில் அம்பானியாகவே ஆகியிருக்கிறார்.