மதமாற்ற முயற்சி: 5 பேர் சிறைபிடிப்பு
பல்லடம்: பல்லடம் அருகே வீடு, வீடாகச் சென்று பிரசாரம் செய்து, கட்டாய மதமாற்றம் செய்ய முயன்ற ஐந்து பாதிரியார்களை பொதுமக்கள் சிறை பிடித்தனர். திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே உள்ளது குள்ளம்பாளையம் கிராமம். இங்கு, நேற்று காலை நாகர்கோவிலைச் சேர்ந்த கிறிஸ்தவ பாதிரியார்கள் கண்ணையன், பிரைட், மத்தியாஸ், பால்ராஜ், வின்சென்ட் ஆகிய ஐந்து பேர் கொண்ட குழு, வீடு வீடாகச் சென்று அங்குள்ள பொதுமக்களை, ‘கிறிஸ்தவ மதத்திற்கு மாறுங் கள். உங்களுக்கு இலவச வீடு, குழந்தைகளுக்கு இலவச கல்வி, பணம் கிடைக்கும்’ எனக் கூறி துண்டு பிரசுரம் வழங்கி வற்புறுத்தியுள்ளனர்.
கட்டாய மதமாற்றத்தை வலியுறுத்திய பாதிரியார்களை குள்ளம்பாளையத்தைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சிறை பிடித்தனர். காமநாயக்கன்பாளையம் இன்ஸ்பெக்டர் சுந்தரமூர்த்தி மற்றும் போலீசார், பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி பாதிரியார்களை மீட்டு, போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்றனர். ஸ்டேஷனில், ”இனி இது போல் கட்டாய மதமாற்றத்தில் ஈடுபடக் கூடாது,” என, எச்சரித்து பாதிரியார்களை அனுப்பி வைத்தனர். பல்லடம் பகுதியில் உள்ள பல பள்ளிகளில் மாணவர்களுக்கு கிறிஸ்தவர்கள் பைபிள் வழங்கியுள்ளனர். இதற்கு இந்து அமைப்புகளிடம் இருந்து கடும் கண்டனம் எழுந்துள்ளது.