அமெரிக்காவிலுள்ள நிவேடாவில் வசிக்கும் ஆன்கஸ் தான்யா வுக்கு வயது வெறும் 30. இளமைத் துள்ளலுடம் உற்சாகமாய் இருக்கவேண்டிய வயதில், அறைகளுக்குள் சோர்ந்து போய் கிடக்கிறாள். காரணம் சட சடவென வளரும் அவளுடைய உடல். இப்போது அவளுடைய உயரம் ஆறரை அடி ! எடை சுமார் 215 கிலோ.
பதினெட்டாவது வயதில் அழகாக ஐந்து அடி எட்டு இன்ச் எனும் வசீகர அளவில் இருந்தவள், சடசடவென வளந்து தனது முப்பதாவது வயதில் ஆறு அடி ஆறு இஞ்ச் எனுமளவுக்கு விஸ்வரூபம் எடுத்திருக்கிறார். கடந்த பன்னிரண்டு வருடங்களில் மட்டும் இவளுடைய வளர்ச்சி 10 இன்ச்கள் ! இது விபரீத வளர்ச்சி ! உலகிலேயே முப்பது வயதில் இந்த உயரமும் எடையும் கொண்ட ஒரே பெண் இவர் தான் !
இவளுக்கு வந்திருக்கும் நோயின் பெயர் அக்ரோமேக்லியா. அதாவது ஹார்மோன்கள் கன்னா பின்னாவென வளர்வது. என்ன செய்தாலும் இதன் வளர்ச்சியைக் கட்டுப் படுத்த முடியாது. சராசரியாய் 250 ஹார்மோன்கள் இருக்க வேண்டிய இடத்தில் தான்யாவுக்கு இருப்பது 3000 !

பதின் வயதில் அழகாய் இருக்க வேண்டும் எனும் எண்ணம் இயல்பாகவே இளம் பெண்களுக்குள் அலைபாயும். அழகாய் இல்லாவிட்டலும் அளவாய் இருந்தேயாக வேண்டும் என நினைக்கும் வயது அது. தான்யாவுக்கு இரண்டும் போய்விட்டது. அதிகப்படியான வளர்ச்சியினால், அழகையும், களையையும், உற்சாகத்தையும் ஒட்டு மொத்தமாக இழந்து விட்டாள்.
இந்த சிக்கல் போதாதென்று உடலும் பெண்மைக்குரிய தன்மைகளை விட்டு முரட்டுத் தனமான ஆண் தோற்றமாய் மாறிவிட்டது. இனிமையாய் இருந்த குரலில் திடீரென ஒரு கரகரப்பும் வந்து சேர்ந்து விட்டது. அடுக்கடுக்காய் வந்த அதிர்ச்சியில் உறைந்து கிடந்தவளைப் பார்த்து கிண்டலடித்து விட்டு கழன்று கொண்டான் உயிராய்ப் பழகிய காதலன் !
எப்படியாவது தனது உடல் எடையைக் குறைக்க வேண்டும் என தான்யாவின் அம்மா கேரன் மருத்துவமனைகளில் அலைந்து திரிந்தார். பல டாக்டர்களைப் பார்த்தார்கள். பல சோதனைகளைச் செய்தார்கள். கடைசியில் அவளுடைய மூளையில் திராட்சைப் பழ அளவுக்கு ஒரு கட்டி இருப்பதைக் கண்டுபிடித்தனர். இந்தக் கட்டிதான் இவளுடைய வளர்ச்சிக்கான காரணமாய் இருக்கலாம் என அவர்கள் நம்பினர். ஆனால் இவ்வளவு பெரிய கட்டியை மூளையிலிருந்து அறுவை சிகிச்சை செய்வதெல்லாம் சாத்தியமில்லை என பின்வாங்கினர்.

சரி உடலிலுள்ள கொழுப்பை ஆபரேஷன் மூலம் அகற்றி விடுவோம் என களத்தில் இறங்கினார்கள். பயனில்லை. மருந்துகள் மூலம் உடலிலுள்ள ஹார்மோன்களின் அளவை மூவாயிரத்திலிருந்து ஆயிரமாகக் குறைக்கப் பார்த்தார்கள். வண்டி வண்டியாய் மருந்துகள் சாப்பிட்டும் ஒன்றும் சரியாகவில்லை.
பல டாக்டர்கள் இவளை ஒரு குரங்காகப் பாவித்து பல சோதனை மருந்துகளையும் கொடுத்துப் பார்த்தார்கள். என்ன செய்தும் உடல் மட்டும் பிடிவாதமாய் வளர்ந்து கொண்டே இருக்கிறது. இப்போது சரியாக நடக்கவும் முடியாமல் வீட்டுக்குள் வீல் சேரில் அடைபட்டிருக்கிறார்.
தன்னுடைய சொந்த ஊரிலுள்ள மக்களே தன்னை அன்புடன் நடத்தவில்லையே எனும் கவலை அவளுக்குள் நிரம்பியிருக்கிறது. மக்கள் பிறரைப் புரிந்து கொள்ளவேண்டும். நான் இப்படி வளர்ந்ததில் என் தப்பு என்ன இருக்கு சொல்லுங்கள் ? நான் என்ன விருப்பப்பட்டா வளர்கிறேன் எனும் அவரது குரலில் ஆதங்கம் வழிகிறது.
“இன்னும் இரண்டு மாதங்கள் மட்டும் தான் நீ உயிரேடு இருப்பாய்” என ஒரு டாக்டர் சொல்லி எட்டு மாதங்களாகிவிட்டது. இதுவரை மருத்துவத்துக்காகச் செலவிட்ட தொகை மட்டும் சுமார் ஒரு கோடி ரூபாய். ஒரு பிரயோசனமும் இல்லை. மிச்சமிருப்பது நம்பிக்கை மட்டுமே !
கடந்த மூன்று மாதங்களாக புதிதாக ஒரு டாக்டர் இவளுக்கு சிகிச்சையளித்து வருகிறார். பல மருந்துகளை ஒன்றாகச் சேர்த்துக் கொடுத்து தான்யாவின் வளர்ச்சியைக் கட்டுக்குள் கொண்டு வரமுடியும் என அவர் நம்பிக்கை தெரிவிக்கிறார். என்னுடைய வளர்ச்சியை கடவுள் போல வந்திருக்கும் இந்த டாக்டர் தடுத்து நிறுத்துவார். நானும் சாதாரண மனுஷியாக உலவுவேன் என கண்களில் கனவுகளுடனும், கண்ணீருடனும் கூறுகிறாள் தான்யா !