கன்னியாஸ்திரிகளின் துர்நடத்தைகள்

தற்போது அறுபது வயதை எட்டியிருக்கும் மூதாட்டியானான பெட்ரா யோரிசன், கத்தோலிக்க திருக்கன்னியர் மடத்தில் கழிந்த தனது இளமைக்கால நினைவுகளை இரைமீட்கும் போது கண் கலங்குகிறார். ஐம்பதுகளின் பிற்பகுதி, நெதர்லாந்தில் Eindhoven என்னுமிடத்தில் அமைத்துள்ளது "எமதருமை மாதா" மருத்துவமனை. அங்கு தாதி பயிற்சிக்காக தங்கியிருந்த பெட்ராவுக்கு அந்த இடம் நரகமாகப் பட்டது.
பருவ வயது சிறுமியாக இருந்த காலங்களில், சகோதரி யோஹனேட்டி என்ற தலைமைக் கன்னியாஸ்திரியை பார்த்து அதிகம் அஞ்சி நடுங்கினார். "நடுச் சாமம், அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் நேரம் பார்த்து, அந்த கன்னியாஸ்திரி எமது படுக்கையறைக்குள் நுழைவார். ஆண்களின் பூட்ஸ் போன்ற பாதணியின் சத்தத்தில் இருந்தே அவர் வருவதை அறிந்து கொள்வோம். கையில் வைத்திருக்கும் டார்ச் லைட் வெளிச்சத்தில் எனது படுக்கையை கண்டுபிடித்த பின்னர், திரைச் சீலைகளை இழுத்து விடுவார். அதன் பிறகு எனது அந்தரங்க உறுப்புகளை காம இச்சையுடன் தடவிக் கொடுத்து விட்டு செல்வார்."
தற்போது ஒரு பத்திரிகையாளராக பணிபுரியும் பெட்ரா, அந்தக் கன்னியாஸ்திரியின் அத்துமீறல்களுக்காக நஷ்டஈடு கோரவில்லை. குறைந்த பட்சம் தனது வாழ்க்கையை பாழ்படுத்தவில்லை என்பதில் திருப்தி கொள்கிறார். ஐம்பதுகளில் பெட்ரா தங்கியிருந்த மருத்துவமனை, "கருணைச் சகோதரிகள்" என்ற கத்தோலிக்க கன்னியாஸ்திரிகள் குழுவினால் நிர்வகிக்கப்பட்டது. இந்த அமைப்பு நெதர்லாந்தில் கத்தோலிக்க மக்கள் செறிந்து வாழும் இடங்களில் ஒரு டசினுக்கும் அதிகமான மருத்துவமனைகளையும், அநாதை மடங்களையும் நடத்தி வந்தது.
பெட்ராவின் கதைக்கு மாறாக, (பெயர் குறிப்பிடாத) இன்னொரு யுவதிக்கு நேர்ந்த கொடுமை, அவரது எதிர்கால வாழ்வையே பாதித்தது. Heerlen என்னுமிடத்தில் உள்ள தாதியர் பாடசாலையில் கல்வி கற்ற 16 வயது நங்கை ஒருவருக்கு நேர்ந்த கசப்பான அனுபவம் இது. ஆசியையான கன்னியாஸ்திரி ஒருவர், அந்த அழகான யுவதியை தன்னுடன் ஓரினச் சேர்க்கை பாலுறவு கொள்ளுமாறு கட்டாயப்படுத்தினார். எட்டு மாதங்களாக தொடர்ந்த ரகசிய பாலுறவு விவகாரம் இறுதியில் அனைவருக்கும் தெரிய வந்தது. பாடசாலை நிர்வாகம் பாதிக்கப்பட்ட அப்பாவி சிறுமியை உடனடியாக வெளியேற்றியது. "நன்னடத்தை" காரணமாக பாதியில் கல்வியை இழந்த சிறுமியின், எதிர்காலமே அதனால் பாதிக்கப்பட்டது. அதே நேரம் அவரை துஷ்பிரயோகம் செய்த காமவெறி கொண்ட கன்னியாஸ்திரி தொடர்ந்தும் பதவியில் நீடிக்க அனுமதிக்கப்பட்டார்.
கத்தோலிக்க மடங்களில் சிறுவர்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்தது தொடர்பாக, இதுவரையும் ஆண் பாதிரியார்களே குற்றஞ்சாட்டப்பட்டு வந்தனர். நெதர்லாந்தின் முன்னணி பத்திரிகையான "NRC Handelsblad " செய்த ஆய்வின் பிரகாரம், கன்னியாஸ்திரிகளும் சிறுவர்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்த உண்மைகள் வெளிவந்துள்ளன. 29 பெண்களின் வாக்குமூலங்களை அந்த நாளேடு பதிவு செய்து வைத்திருக்கிறது. பாதிக்கப்பட்ட பெண்களில் 19 பேர் கன்னியாஸ்திரிகளால் பாலியல் தொந்தரவுக்கு ஆளாகியுள்ளனர். கன்னியர் மடங்களால் நிர்வகிக்கப்பட்ட பெரும்பாலான சிறுவர் இல்லங்களில், கிறிஸ்தவ மதம் போதிக்கும் கருணையும், அன்பும் காணாமல் போயிருந்தன. கொடுமையான அடக்குமுறைகளும், இரக்கமற்ற தண்டனைகளும் சிறுவர்களை பயந்து ஒடுங்கி வாழ வைத்தன. சிறுவர்களின் துன்பத்தைக் கண்டு மகிழ்வுறும் கன்னியாஸ்திரிகளுக்கும் குறைவில்லை.
1940 லிருந்து 1945 வரை, நெதர்லாந்து நாசி ஜெர்மனியின் ஆக்கிரமிப்பின் கீழ் இருந்தது. Sittard எனுமிடத்தில் இருந்த "Kollenberg அனாதைகள் மடம்" நாசிச ஆதரவு கன்னியாஸ்திரிகளால் நிர்வகிக்கப்பட்டது. மடத்தில் இருந்த கட்டுப்பாடுகளும் நாசிச கொள்கையை பிரதிபலித்தன. குறிப்பாக படுக்கையில் சிறுநீர் கழிக்கும் சிறுவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட்டனர். அன்று பாதிக்கப்பட்ட பென் யாஸ்பரின் வாக்குமூலத்தில் இருந்து சில வரிகள். "நித்திரையில் படுக்கையில் சிறுநீர் கழித்த சிறுவர்களின் காதுகளை பலமாக முறுக்குவார்கள். சதையை பிய்ப்பது போல கிள்ளுவார்கள். மைதானத்தில் நிர்வாணமாக நிறுத்தி வைத்து, ஈரமான உள்ளங்கியை தலையில் போட்டு விடுவார்கள். அங்கே நாம் பட்ட அவமானங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. சிறுநீர் கழித்து விடுவேனோ என்ற அச்சத்தில் நான் சில நாட்கள் உறங்கவேயில்லை."
