வாள் முனையில் மத அதிகாரம்

                 வாள் முனையில் மத அதிகாரம்



சராசரி மனிதனின் வாழ்வில், முப்பது வயதிற்கு பின்னர் பக்குவம் ஏற்படுகின்றது. இயேசுவும், முகமதுவும் தமது முப்பதாவது வயதில் இருந்தே மதப் பிரசங்கங்களை ஆரம்பிக்கின்றனர். கி.பி. 600 ம் ஆண்டளவில் முதன் முறையாக பிரசங்கித்த முகமதுவுக்கு, "கப்ரியேல்" என்ற தேவதை மூலமாக "குர் ஆன்" என்ற திருமறை இறக்கப்பட்டது. கிறிஸ்தவ மதம் போலன்றி, பொதுவாக இஸ்லாமிய மதத்தில் அற்புதங்களை காண்பதரிது. முகமதுவின் வாழ்க்கையில் நடந்ததாக கூறப்படும், இது போன்ற ஒரு சில அற்புதங்களைத் தவிர, மற்ற எல்லாமே சரித்திரக் குறிப்புகளாகவே காணப்படுகின்றன. புனித குர் ஆனின் வாசகங்கள் யாவும், முகமது நபிக்கு இறைவனால் வழங்கப்பட்டதாக இஸ்லாம் கூறுகின்றது.

அன்றைய காலத்தில் சிரியாவில் வாழ்ந்த கிறிஸ்தவர்களும், யூதர்களும் முகமதுவின் போதனைகளை ஏற்கவில்லை. இத்தனைக்கும் வியாபார நிமித்தம் சிரியா சென்று வந்த முகமது, அங்கிருந்த (கிறிஸ்தவ/யூத) ஞானிகளுடன் தத்துவ விசாரங்களை நடத்தியுள்ளார். பைபிளில் உள்ள கதைகள் அப்படியே புனித குர் ஆனில் உள்ளன. இதனாலும் கிறிஸ்தவர்களுக்கும், யூதர்களுக்கும் முகமதுவின் போதனைகளில் ஈர்ப்பு ஏற்படவில்லை. அந்தக் காலத்தில், முகமது பைபிளை பிரதியெடுத்து, அல்லது திரித்து போதிக்கிறார் என்ற குற்றச்சாட்டு இருந்தது. (யூதர்களின்) தோராவுக்கும், பைபிளுக்கும், குர் ஆனுக்கும் பொதுவான மூல நூல் ஒன்று இருந்தது. அது இன்று வழக்கொழிந்து விட்டது என்று முஸ்லிம்கள் வாதிடுகின்றனர். ஒன்றுக்கொன்று முரண்பட்ட பல பைபிள் நூல்கள் இருந்த காலத்தில், ஒரே பைபிளுக்கு யாரும் உரிமை கோர முடியாது.

பாட்டாளி வர்க்கப் பிரதிநிதியான (ஒரு தச்சுத் தொழிலாளியின் மகன்) இயேசு கிறிஸ்து, அடிமைகளின் விடுதலை குறித்தெல்லாம் போதனை செய்த போதிலும் அதிகார வர்க்கத்தை அசைக்க முடியவில்லை. இயேசுவின் சீடர்களில் பலர் மீனவ சமூகத்தை சேர்ந்தவர்கள். அவரை பின்பற்றியவர்கள் ஏழை எளியவர்கள். இருப்பினும் இயேசு ஒரு பாட்டாளி வர்க்கப் புரட்சியை விரும்பவில்லை. அன்பினால் அடக்குமுறையாளனின் மனதை மாற்றலாம் என போதித்தார். இயேசுவின் சீடர்களில் ஒருவரான யூதாஸ், ரோம சாம்ராஜ்யவாதிகளுக்கு எதிரான ஆயுதப் போராட்டம் குறித்து வாதிட்டார். எனினும் இயேசு வன்முறைப் பாதையை நிராகரித்திருந்தார். முடிவு எப்படியிருந்தது என்பதை நான் இங்கே விளக்கத் தேவையில்லை.

முகமது, இயேசுவின் அஹிம்சா வழியை பின்பற்றவில்லை. தான் உறுதியாக பற்றிக் கொண்ட கொள்கைக்காக வாளேந்தி போராடுவதில் தவறில்லை என்பது அவரது வாதம். நமது காலத்திய சோமாலிய புத்திஜீவியான ஹிர்சி அலி, "முகமது ஒரு தீவிரவாதி!" எனக் கூறி சர்ச்சையை உருவாக்கினார். முகமதுவின் மதத்திற்கான போராட்டத்தை அந்தக் கால பின்னணியிலேயே புரிந்து கொள்ள வேண்டும். மேட்டுக்குடியில் பிறந்த முகமது நபி, அடிமையையும் சகோதரனாக சமத்துவமளித்த புதிய சமுதாயத்தை உருவாக்கியது சாதாரண விடயமல்ல. அதற்கு அசாத்திய துணிச்சல் வேண்டும். இன்னொரு பக்கத்தில், அரேபியாவில் இஸ்லாமின் எழுச்சியை வணிக சமூகத்தின் விரிவாக்கத்துடன் இணைத்துப் பார்க்க வேண்டும். ஐரோப்பாவில் பிரெஞ்சுப் புரட்சியின் பின்னர் ஏற்பட்ட முதலாளித்துவக் கூறுகள் சில, அன்றைய இஸ்லாமிய சமூகத்தில் காணப்பட்டன.

அன்றைய பாலஸ்தீனம், சிரியா, ரோம சாம்ராஜ்யத்தின் ஒரு பகுதியாக இருந்த போதிலும், ஆட்சியிலிருந்தவர்கள் கிரேக்கர்கள். ஆட்சியாளர்கள் தம்மை ரோமர்கள் என்று அர்த்தப்படும் "Romaioi " (உச்சரிப்பு: ரொமேயீ ) கிரேக்க மொழியில் அழைத்துக் கொண்டனர். பிரிட்டிஷ் இந்தியாவில் ஆங்கிலோ-இந்தியர்கள் நிர்வாகப் பொறுப்புகளில் அமர்த்தப் பட்டதைப் போல, கிரேக்க மொழி பேசும் அரபுக்களையும், ரோமர்கள் நிர்வாகப் பொறுப்புகளில் நியமித்தனர். பைபிள் இவர்களையும் ரோமர்கள் என்று தான் குறிப்பிடுகின்றது. இயேசு முன்னெடுத்தது ஒரு சீர்திருத்த இயக்கம். அந்தப் பிராந்தியத்தில் பெரும்பான்மையினர் பேசிய அரேமிய மொழி இயேசுவுக்கும் தாய்மொழி. இயேசுவின் இயக்கம் அரசியல் தந்திரோபாய ரீதியாக வெற்றி பெற்றிருந்தால், அரேமிய மக்களின் தாயகம் உருவாகியிருக்கும். இருப்பினும் யூத-ரோம கூட்டு முயற்சியால் அந்த இயக்கம் நசுக்கப்பட்டது. பிற்காலத்தில் கிறிஸ்தவ மதம், கிரேக்க-ரோம சாம்ராஜ்யத்தின் உத்தியோகபூர்வ மதமாகியது ஒரு வரலாற்று முரண்நகை.

ரோம சாம்ராஜ்யம் ஒரு போதும் விழவில்லை, அது கிறிஸ்தவ மதத்தால் பொறுப்பேற்கப்பட்டது. சுருங்கச் சொல்லின், அன்றைய மத்திய ஆசியாவில் கிறிஸ்தவ மதம் என்ற பெயரில், ஒரு மேற்கத்திய அரசு அதிகாரம் கோலோச்சியது. அரேபியாவில் இருந்து புறப்பட்ட இஸ்லாமியப் படைகள், அதற்கு நிரந்தரமாக முடிவுரை எழுதின. இந்தப் பின்னடைவு நவீன கால அரசியலிலும் எதிரொலிக்கின்றது. மத்திய ஆசியாவில் அரபு-இஸ்லாமியப் படைகளின் வெற்றிக்கு இரண்டு காரணங்கள் இருந்தன. ஒன்று, சகோதர மொழியான அரேமிய மொழி பேசும் மக்களை வென்றெடுக்க முடிந்தமை. இரண்டு, உள்நாட்டுப் பிரச்சினைகளால் பலவீனமடைந்த கிரேக்க-ரோம சாம்ராஜ்யம்.

ஆரம்பத்தில் முகமதுவை பின்பற்றிய முதல் முஸ்லிகள் அனைவரும் மெக்கா நகரின் ஆதிக்க வர்க்கமான குறைஷி குலத்தை சேர்ந்தவர்கள். நிச்சயமாக முகமது தனது சொந்த ஊரான மெக்காவில் தான் முதலில் போதித்திருப்பார். அவரால் சிலரை இஸ்லாம் என்ற புதிய மார்க்கத்திற்கு மாற்ற முடிந்தாலும், பல எதிரிகளையும் சம்பாதித்தார். அந்த எதிரிகளும் குறைஷிகள் தாம். குறைஷிகள் ஏற்கனவே நல்ல வருமானத்தை அள்ளிக் கொடுத்துக் கொண்டிருந்த மெக்கா கோயிலை பராமரித்துக் கொண்டிருந்தனர். அதையெல்லாம் விட்டு விட்டு, சில "உதவாக்கரை இளைஞர்களின்" பேச்சைக் கேட்க அவர்களுக்கென்ன பைத்தியமா? "தம்மைத் தாமே முஸ்லிம் என அழைத்துக் கொள்ளும் இளைஞர்கள் சமூகநீதி பற்றி எல்லாம் பேசுகிறார்கள். சாதியில் உயர்ந்த குறைஷிகளான நாம் அடிமைகளையும் சகோதரர்களாக பாவிக்க வேண்டுமாம்...." குறைஷி மேலாதிக்கவாதிகள் இஸ்லாம் என்ற மதத்தை முளையிலேயே கிள்ளியெறிய முனைந்தனர். மெக்கா நகரில் முஸ்லிம் இளைஞர்கள் வேட்டையாடப்பட்டனர்.

622 ம் ஆண்டு, முகமதுவும், முஸ்லிம்களும் மெக்காவில் இருப்பது தமக்கு ஆபத்து என உணர்ந்தனர். மெக்காவில் இருந்து 300 கி.மீ. தூரத்தில் இருக்கும் மெதினா நகரில் இருந்து எதிர்பாராத உதவி கிட்டியது. பல ஆண்டுகளாக தீர்க்க முடியாமல் இழுபட்ட தகராறு ஒன்றை தீர்த்து வைக்க வருமாறு முகமதுவுக்கு அழைப்பு வந்தது. அரேபிய தீபகற்பம் முழுவதும் நன்மதிப்பை பெற்றிருந்த குறைஷி குலத்தை சேர்ந்தவர் என்பதால் முகமதுவுக்கு அந்த அழைப்பு வந்திருக்கலாம். மெதீனா சென்ற முகமது, வருடக்கணக்காக தீர்க்க முடியாத பிரச்சினையை தீர்த்து வைத்தார். பிரதிபலனாக பல மெதீனாவாசிகள் முஸ்லிம்களாக மாறினார்கள்.

இறைதூதர் முகமதுவும், அவரை பின்பற்றியவர்களும், மெக்காவில் இருந்து மெதீனாவுக்கு புலம்பெர்ந்த சம்பவம், சரித்திர முக்கியத்துவம் வாய்ந்தது. இல்லாவிட்டால் மெக்காவில் முஸ்லிம்களை அன்றே தீர்த்துக் கட்டியிருப்பார்கள். மெக்காவில் இருந்து மெதீனாவுக்கு புலம்பெயர்ந்த நாளில் (ஹிஜ்ரா) இருந்து இஸ்லாமியக் கலண்டர் தொடங்குகின்றது. முகமதுவுடன் மெக்காவில் இருந்து சென்றவர்கள் "முஜாஹிரூன்' என்றழைக்கப் பட்டனர். மெதினா நகரில் புதிதாக இஸ்லாமிய மதத்தை தழுவியவர்கள் "அன்சார்" (உதவியாளர்கள்) என அழைக்கப்பட்டனர். மெதீனா சென்ற முகமது தற்பாதுகாப்புக்காக ஒரு படையை உருவாக்கினார். முகமது ஒரு மதப்பிரசாரகராக மட்டுமலல்லாது, தலைசிறந்த இராணுவத் தளபதியாகவும் திகழ்ந்தார்.

முகமது தலைமையிலான முஸ்லிம் படைகள், மெக்கா படைகளை போரில் வென்றன. 630 ம் ஆண்டில், மெக்கா நகரம் முகமதுவின் தலைமையை ஏற்றது. இதனால் மெதீனாவுடன், மெக்காவும் முஸ்லிம்களின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தன. எனினும் புதிய முஸ்லிம் தேசத்தின் நிர்வாகத் தலைநகராக மெதீனா விளங்கியது. சிரியா, ஈராக் மீதான படையெடுப்புகள் யாவும் மெதீனாவில் இருந்தே திட்டமிடப்பட்டன. ஆரம்ப காலங்களில் இஸ்லாமியப் படைகளை வழிநடத்திய கட்டளைத் தளபதிகள் அனைவரும் குரைஷிகளாக இருந்தனர். இதனால் அன்சாரிகள் எனப்படும் மெதீனாவாசிகள் அதிருப்தியுற்றனர். இந்த முரண்பாட்டை தீர்க்க வேண்டிய அவசியத்தை, தலைமைப் பொறுப்பில் இருந்தவர்கள் உணர்ந்தனர். இருப்பினும் முகமதுவின் இறப்புக்குப் பின்னர், இஸ்லாமிய சமூகத்தினுள் வேறு சில பிளவுகள் தோன்றின.

முகமதுவின் காலத்திலேயே, அரேபிய தீபகற்பத்தில் முஸ்லிம்களின் அரசியல் ஆதிக்கம் நிறுவப்பட்டு விட்டது. பெரும்பாலும் சமாதான வழிகளிலேயே அந்த அரசியல் அதிகாரம் கைப்பற்றப் பட்டது. அரேபிய தீபகற்பத்தில் இருந்த குட்டி தேசங்கள் மெதீனாவிற்கு வரி கட்ட சம்மதித்தன. இறைதூதர் முகமது நபியின் மரணத்தின் பின்னர், சில பிரதேசத் தலைவர்கள் வரி கொடுக்க மறுத்தனர். அதாவது முஸ்லிம்களாக தொடர்ந்து இருந்த போதிலும், மெதீனாவின் அரசியல் அதிகாரத்திற்கு எதிராக கிளர்ச்சி செய்தனர். இன்று யேமன் இருக்கும் இடத்தில், பானு ஹனீபா என்ற அரபு குலத்தை சேர்ந்தவர்கள், தமக்கென ஒரு இறைதூதரை தெரிவு செய்து சுதந்திரப் பிரகடனம் செய்தனர். தென் கிழக்கு அரேபியாவின் பிற குலங்கள், ஒரு பெண் தீர்க்கதரிசியின் பின்னால் அணி திரண்டனர். மெதீனாவில் இருந்து சென்ற படையணிகள் அத்தகைய கிளர்ச்சியை அடக்கின. இஸ்லாமிய சமூகத்தினுள் தோன்றிய முதலாவது சகோதர யுத்தம், "ரிட்டா போர்கள்" என அழைக்கப்பட்டன.

இஸ்லாமுக்கு முந்திய அரபு சமுதாயத்தில் பெண்கள் தலைமைப் பாத்திரம் வகிக்குமளவிற்கு சுதந்திரம் பெற்றிருந்தனர். இஸ்லாம், பிற மத நிறுவனங்களைப் போலவே, சட்டத்தின் பெயரில் பெண்களை ஆணுக்கு கீழ்ப்படிவான நிலைக்கு தள்ளியது. இன்றும் கூட, இஸ்லாத்தில் மட்டுமல்ல, கிறிஸ்தவத்திலும் பெண்கள் மதப்பிரசங்கம் நினைத்தே பார்க்க முடியாது. மெதீனாவுக்கு எதிரான கிளர்ச்சிக்கு தலைமை தாங்கிய ஸாஜா என்ற பெண், தன்னை இன்னொரு இறைதூதராக நியமித்துக் கொண்டார். இஸ்லாமிய சரித்திரத்தில் இது ஒரு குறிப்பிடத்தக்க நிகழ்வு. சாஜாவும், அவர் சார்ந்த தக்லீப் குலமும் கிறிஸ்தவ பாரம்பரியத்தை கொண்டிருந்தமையும் (சிறிது காலமே நீடித்த) கிளர்ச்சிக்கான புறக்காரணிகள். மெதீனாவுக்கு எதிராக கலகம் செய்த அரபுக் குழுக்களை ஒடுக்கிய படையணிக்கு தலைமை தாங்கியவர் காலித் இபுன் வாலித். இவர் பின்னர் சிரியா மீதான படையெடுப்புகளுக்கு சிறப்புத் தளபதியாக பதவியுயர்த்தப்பட்டார்.