புழுதியில் போடாதே அம்மா

                  புழுதியில் போடாதே அம்மா



அன்புள்ள அம்மாவுக்கு
உன்
வயிற்றுக் கதகதப்பில்
விரல் சூப்பி மெய்மறந்து
உறங்கிவன் எழுதும் மடல்


நான் தும்மினாலும்
ஈருமினாலும்
மருந்து சாப்பிட்டு
பத்தியம் காத்தவள் நீ


சேற்றில் குதித்து
சேற்றில் புரண்டு
உடலெல்லாம் சகதியாய் கிடந்தாலும்
உரம் துவட்டி
நறுமண புகைப் போட்டு
ஊச்சி முகர்ந்தவள் நீ


சிலேட்டு பலகையில்
எச்சில் துப்பி
எழுத்தழித்தப் போது
தவறைத் திருத்தி
சுகாதாரம்
கற்றுக் கொடுத்தவள் நீ


பள்ளிச் செல்லாமல்
விளையாடிய போதும்
நண்பனின் பேனாவை
திருடி மறைத்தப் போதும்
கொய்யா மரத்தில்
கட்டிவைத்து அடித்தவள் நீ


என்
சின்னக் கைகளை
தூக்கி பேசி
கைதட்டல் வாங்கிய போது
ததும்பும்
கண்ணீருடன் கட்டிப் பிடித்தவள் நீ


எனக்குள்
இருக்கும்
நல்ல இயல்புகளை
நாற்றுப் பாவியவள் நீ


அத்தகைய
உனக்குள்
எரிமலை ஓன்று இருப்பதை
இத்தனை நாளும்
காட்ட வில்லையே என் அம்மா?


உடை வேண்டு மென்று
நான் கேட்டதில்லை
நீதான் வாங்கித்தந்தாய்
படிக்க வேண்டுமென்று
பிடிவாதம் பிடிக்கவில்லை
நீதான் படிக்கவைத்தாய்


பெண் வேண்டுமென நான்
தவிக்கவில்லை
நீதான் கட்டிவைத்தாய்


கைத்தலம் பற்றி
வந்தவளை
காப்பது உன் கடமை ஏன்று
கட்டளை போட்டவளும் நீதான்


பெற்ற பிள்ளையை
பிடிக்கும் உனக்கு
அவனை பற்றி
நிற்பவளை
என் பிடிக்க வில்லை
அவள்
பிறந்த வயிறு வேறு என்பதாலா ?


அக்காவின்
மகனை அணைக்கின்றாய்
தங்கை மகளையும்
தள்ளி வைக்கவில்லை நீ
என் மகன் மட்டும்
ஆற்றில்
அடித்து வந்த ஒட்டைப் பானையா ?


பாட்டியிடம்
கதை கேட்க
அவன் இதயம்
துடிக்கும் ஒசை
உன்காதில் விழுந்தாலும்
மனதில் விழாமலே போய்விட்டதே
என்
அவன் பிறந்ததும்
வேறு வயிறு என்பதாலா


சினிமாவிற்கு
காசு தராத உன்னை
திட்டி இருக்கிறேன்


உன்
மறதியைப் பார்த்து
கேலி செய்திருக்கிரேன்
போலியாக உன்னை
அடித்தும் ஈருக்கிறேன்


அப்போதெல்லாம்
பிள்ளை விளையாட்டாய்
பார்த்த உன் கண்கள்
இப்போது மட்டும்
விஷமமாய் பார்ப்பது என்


குழலையும் யாழையும் விட
இனிதான என் குரல்
இப்போது
தலையனை மந்திர ஒசையாய்
கேட்பது என்


எனக்குள்
ஏந்த மாற்றமும்
இல்லாத போது ஏந்த
மாற்றத்தைக் கண்டு நீ நடுங்குகிறாய்


உனக்கு
ஞாபகம் இருக்கிறதா
உன்
முந்தானைத் தலைப்பை
பிடித்துக் கொண்டு
சர்க்கஸ் பார்க்க ஓருமுறை வந்தேன்


சிங்கத்தின் வாய்க்குள்
தலையை
விட்டெடுப்பதை பார்த்து
அது எப்படி
என்று ஊன்னைக் கேட்டேன்


அன்பால்
எதையும் வசப்படுத்தலாம்
என பதில் சொன்னாய்


அன்பு வட்டத்திற்குள்
சிங்கம் புலியே வசப்படும் போது
உன் மருமகள்
மட்டும் என்ன
அடங்காதப் புயலா
இதை என் நீ மறந்து விட்டாய்


கங்கையும் காவிரியும்
எங்கு வேண்டு மென்றாலும்
ஒடலாம்
ஆனால் அவைகள்
சமுத்திரத்தத் தான்
சரணடைய வேண்டும்


மலைச் சிகரத்திலும்
மரக்கிளையிலும்
மேகங்கள் தவளலாம்
ஆனாலும்
ஆகாயத்திற்குத்தான் ஆது சொந்தம்


நீ
சமுத்திரத்தை விடவும்
ஆகாயத்தை விடவும் பெரியவள்

உன்னை
விட்டு நான்
எங்கே போய்விட முடியும் ?


நீ
கொடுத்த
ஜீவ பலத்தை
வேறு யார் கொடுத்துவிட முடியும் ?


தெய்வம்
அணிவதற்குத்தான் மாலை
தெருவில் வீசுவதற்கல்ல
மாலையின் பிராத்தனை இதுதான்
வண்டு தொட்டது
என்பதற்காக

புழுதியில் தூக்கி போட்டு விடாதே...