சித்தாந்தச் சாமி கோயில்

சித்தாந்தச் சாமி திருக்கோயில் வாயிலில்
தீப வொளி யுண்டாம்;-பெண்ணே
முத்தாந்த வீதி முழுதையுங் காட்டிட
மூண்ட திருச் சுடராம்;-பெண்ணே!

உள்ளத் தழுக்கும் உடலிற் குறைகளும்
ஓட்ட வருஞ் சுடராம்;-பெண்ணே!
கள்ளத் தனங்கள் அனைத்தும் வெளிப்படக்
காட்ட வருஞ் சுடராம்;-பெண்ணே!

தோன்று முயிர்கள் அனைத்தும்நன் றென்பது
தோற்றமுறுஞ் சுடராம்;-பெண்ணே
மூன்று வகைப்படும் கால நன்றென்பதை
முன்னரிடுஞ் சுடராம்;-பெண்ணே!

பட்டினந் தன்னிலும் பார்க்க நன்றென்பதைப்
பார்க்க வொளிச் சுடராம்;-பெண்ணே!
கட்டு மனையிலுங் கோயில் நன்றென்பதைக்
காண வொளிர்சுடராம்;-பெண்ணே!